முடா முறைகேடு மூலம் தனது மனைவிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கிய வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக குற்றம்சாட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை இன்று (செப்டம்பர் 30) வழக்குப்பதிவு செய்துள்ளது.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு முறைகேடாக நிலத்தை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, சித்தராமையா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகரத்னா, சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இந்த வழக்கு குறித்து நான் பயப்பட மாட்டேன். சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எந்த தடைகளையும் சந்திப்பேன். இதற்காகவெல்லாம் நான் ராஜினாமா செய்ய மாட்டேன். எனது மனசாட்சி தெளிவாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், முடா முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னதாக டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்தசூழலில் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்… உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்!