இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ED attached Director Shankar
பத்திரிகையாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ஆம் ஆண்டு நாவலாக வெளியானது.
இதையடுத்து 2010-ல் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் வெளியானது. இந்த படத்தின் கதை தன்னுடைய ’ஜுகிபா’ கதை என்று ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரினார்.
தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்தநிலையில், எந்திரன் பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நடிகர் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் 290 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்துக்கு இயக்குனர் ஷங்கர் 11.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் கதை, அமைப்பு கதாபாத்திரம், கருப்பொருள் ஆகியவற்றை பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆய்வு செய்தது.
ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’ஜுகிபா’ கதைக்கும் எந்திரன் திரைப்பட கதைக்கும் இருக்கும் ஒற்றுமை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் படி இயக்குனர் ஷங்கர் மீது கதை திருட்டு குற்றச்சாட்டு நிரூபணமானது.
இயக்குனர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறி இருக்கிறார். இது சட்டவிரோத பணப்பரிமாற்றம் 2022 சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாகும்.
எனவே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயக்குனர் ஷங்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.