நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அமலாக்கத் துறைக்கு எதிராக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை உதவி இயக்குனர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனையின் போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்தரன் வீடு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஆகாஸ் பாஸ்கரனிடமிருந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சீல் அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றம் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றபட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை திரும்பி ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஸ் குமார் செப்டம்பர் 17ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த முறை பதில் மனு தாக்கல் செய்யாததால் அமலாக்கத் துறைக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
