முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கு ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்யமா சுந்தரம் மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள், “செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும். அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டு 330 நாட்களாக சிறையில் இருக்கிறார்” என்று தெரிவித்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.ஒஹா, உஜ்ஜல் புயான் அமர்வு, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிஎம்எல்ஏ விதியின் கீழ் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வுகள் இருக்கின்றன. 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார் என்ற காரணத்திற்காக மட்டும் முன்னாள் அமைச்சருக்கு முன்னுரிமை அளிக்க முடியாது” என்று வாய்மொழியாக தெரிவித்தது.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருந்தாலும் அதை மீறி ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்து வருகிறார்” என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை மே 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தரப்பில், அவர் வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், சொலிசிட்டர் ஜெனரல் இல்லாமல் எப்படி வழக்கை விசாரிக்க முடியும். இன்று விசாரிக்க சாத்தியமில்லை என்று கூறி வழக்கை ஒத்தி வைக்கிறோம் என்று தெரிவித்தனர்.
குறைந்தபட்சம் நாளைக்காவது ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அமலாக்கத் துறை வாதங்களை கேட்காமல் விசாரிக்க முடியாது என்று கூறி வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடைகால விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
SHARE MARKET: உச்சம் தொட்ட அதானி பவர்! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு : மோடி கண்டனம்!