நீட் முறைகேட்டை கண்டித்து வரும் 24ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக மாணவரணி இன்று (ஜூன் 22) அறிவித்துள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது.
அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் வரும் ஜூன் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் புயலை எழுப்பியுள்ள நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக மாணவரணி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா