மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி அந்தஸ்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று(ஏப்ரல் 10) திரும்ப பெற்றுள்ளது.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ராஷ்டிர சமிதி, மணிப்பூரில் பிடிஏ கட்சி, புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி, மேற்கு வங்காளத்தில் ஆர்எஸ்பி, மிசோரமில் எம்பிசி ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்குகிறது.
அதன்படி, மக்களவை அல்லது மாநில சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில், குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெறவேண்டும்.
மாநிலங்களில் இருந்து லோக்சபாவில் குறைந்தபட்சம் 4 இடங்களையாவது வெல்ல வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது.
என்சிபி(தேசியவாத காங்கிரஸ்), கடந்த 2000 இல் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2016 இல் தேசிய அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
