‘போதும் என்ற மனமே பொன் செய் மருந்து…’ பொருளாதாரம் சார்ந்து இந்தப் பழமொழி உருவகப்படுத்தப்பட்டிருந்தாலும், உணவு சார்ந்து மறு உருவாக்கம் செய்வது இப்போதைய காலத்தின் கட்டாயம். சாப்பிட்டது போதும் என்பதைக் கண்டுபிடிக்க தனி கணக்கு எல்லாம் போடத் தேவையில்லை. சாப்பிடும்போது எவ்வித கவனச் சிதறலும் இன்றி, மனதை ஒருநிலைப்படுத்தி சாப்பிட்டாலே போதும்.
ஆனால், அதுவே செல்போன் பார்த்துக்கொண்டும், சுவைக்கு அடிமையாகியும் சாப்பிடத் தொடங்கினால் ‘சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி அளிக்கும் உணர்வு அமைப்பில் சிக்னல் கோளாறு ஏற்படத் தொடங்கிவிடும்.
நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் ஓரளவுக்கு விரிந்து இடமளிக்கும் சக்தி வயிற்றுத் தசைகளுக்கு உண்டு. ‘எவ்வளவு அடித்தாலும் தாங்கும்…’ என்பதற்காக கூடுதல் சுமையை அனுதினமும் கொடுத்துக் கொண்டே இருந்தால் பிரச்சினைதான். பசி அடங்கிவிட்டது எனும் உணர்வுக்கும், நரம்பிழைகளுக்கும் மூளைக்கும் தொடர்பிருக்கிறது.
‘சாப்பிட்டது போதும் எனும் உணர்வே…’ உணவு உண்ட திருப்தியை நமக்கு அளித்து அவ்வேளைக்கான பசி உணர்வை நிறைவு செய்கிறது. ஆனால், அளவுக்கு மீறி… பசி உணர்வையும் மீறி சாப்பிடுவதால் சாப்பிட்டது போதும் என சமிக்ஞை கொடுக்கும் மூளைக்கே குழப்பத்தை ஏற்படுத்தும் சூழலுக்குத் தள்ளிவிடுகிறோம். அதாவது காலங்காலமாக மனித உடலுக்குள் நடைபெற்று வந்த முறையான இயங்கியலுக்குப் பாதகங்களை உண்டாக்கத் தொடங்கியதே நோய்களுக்கான தொடக்கப்புள்ளி.
எவ்வளவு பிடித்தமான உணவாக இருந்தாலும் சரி, வயிறு முட்டும் அளவுக்குச் சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும், சோர்வுற்ற ஆரோக்கியம் துளிர்த்தெழும். நாம் பின்பற்றுவதோடு அடுத்த தலைமுறைக்கும் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலி எனும் ஆரோக்கிய சூத்திரத்தைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினால், இனியாவது ஆரோக்கியத் தலைமுறை உருவாகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கண்களுக்கு தினமும் காஜல் பயன்படுத்துபவரா நீங்கள்?
விஜய்யின் வெயிட் என்ன? ஸ்டாலின் எடுத்த அவசர சர்வே!
கிச்சன் கீர்த்தனா : கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் ரசகுல்லா!