வாரத்தில் 3 முறை பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு அபாயத்தை 20% அதிகரிக்க கூடும் என BMJ(British Medical Journal) இதழில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இப்போதெல்லாம் குழந்தைகளை பார்க், பீச், தியேட்டர் என எங்கு அழைத்துச் சென்றாலும் அவர்கள் கைகாட்டும் ஸ்நாக்ஸ் வகைகளில் ப்ரெஞ்சு ப்ரைஸ் முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.
குழந்தைகளை மட்டுமல்ல இளைஞர்களும், பெரியவர்களும் கூட அதை தான் அதிகம் வாங்குகின்றனர். ப்ரெஞ்சு ப்ரைஸ் மட்டும் இல்லை. உருளைக்கிழங்கை குழம்பு, கூட்டு என எப்படி சமைத்தாலும் சிலருக்கு மிகவும் பிடிக்கும்.
அதேசமயம் உருளை கிழங்கு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அபாயம் உள்ளது என்ற அச்சமும் இன்றைய தலைமுறையினரிடையே அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து புதிய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக வாரத்தில் 3 முறை வரை பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடும் பட்சத்தில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 20 சதவிதிம் வரை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என BMJ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் தொடக்கத்தில் நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் அல்லாத 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் பதில்களை ஆய்வு செய்தனர்.
36 ஆண்டுகால தொடர் ஆய்வில் 22,300 பங்கேற்பாளருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு அமெரிக்காவை அடித்தளமாக கொண்டு நடத்தப்பட்டது.
அதே சமயம் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு குறித்து இரத்த சர்க்கரை ஒழுங்கு முறை மற்றும் நீண்ட கால ஆரோக்கியத்தில் உள்ள உணவுகளின் தாக்கத்தையும் விளக்கும் வகையில் உள்ளது.
அமெரிக்கர்களின் பிரச்சனை
இந்நிலையில் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு அமெரிக்கர்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) 2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி, அமெரிக்காவில் சுமார் 38 மில்லியன் மக்கள்—அதாவது ஒவ்வொரு 10 பேரில் ஒருவர்—நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதில் 90 முதல் 95% பேர் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். டைப் 2 நீரிழிவு நோயின் வளர்ச்சி மற்றும் மேலாண்மையில் உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது. இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு அதிகப்படியான உருளைக்கிழக்கு நுகர்வும் ஒரு காரணம் என நீண்ட காலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரையை விரைவாக உயர்த்தும் தன்மை கொண்டவை என்பதால், டைப் 2 நீரிழிவு நோய் உள்ள பலர் இவற்றைத் தவிர்க்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியான ஆய்வுகளின் முடிவு பொதுவாக உருளைக்கிழங்கு உட்கொள்ளல் (குறிப்பாக பிரஞ்சு ப்ரைஸ்) அதிகமாக இருப்பது டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்துடன் தொடர்புடையது என உறுதிப்படுத்தியது. மேலும் 2018 ஆம் ஆண்டு ஆய்வும் இதேபோன்ற முடிவுகளைக் காட்டியது.
எப்படி சாப்பிடலாம்
தற்போது வெளியாகி உள்ள ஆய்வு முடிவில் பிரெஞ்சு ப்ரைஸ் உட்கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மறுபுறம், வேகவைத்த, சுட்ட, அல்லது மசித்த உருளைக்கிழங்குகள் இத்தகைய ஆபத்தை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தவில்லை என கண்டறிப்பட்டுள்ளது. இப்படி சமைக்கும் போது கூடுதல் கொழுப்புகளைச் சேர்ப்பதில்லை, மேலும் உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களின் உணவு தரத்தை மேம்படுத்தலாம். இதனால் உருளைக்கிழங்கையும் நீரிழிவு நோய்க்கு ஏற்ற உணவு திட்டத்தில் இணைக்கலாம் என அமெரிக்க நீரிழிவு சங்கம் தெரிவித்துள்ளது.
முழுதானியங்கள்
ஆனால் நாம் உருளைக்கிழங்குக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது மிகவும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியது. இதனால் வாரத்திற்கு மூன்று முறை உருளைக்கிழங்குக்கு பதிலாக முழு கோதுமை பாஸ்தா போன்ற முழு தானியங்களை எடுத்துகெள்வது டைப் 2 நீரிழிவு நோய் விகிதத்தை 8% குறைப்பதாக மதிப்பிடப்பட்டது.
அதேசமயம் பிரெஞ்சு ப்ரைஸுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொண்டால், இந்த விகிதம் 19% வரை குறையும். நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள் இரத்த குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்கி, சிறந்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் உங்களுக்கு உடல் நலப் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது.
