சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் மிடில் பெர்த்- அதிகாலை நேரத்தில் கழன்று பயணிகள் மீது விழுந்ததால் பலருக்கும் காயம் ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பாலக்காடு நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென S5 பெட்டியில் மிடில் பெர்த்- நடுப் படுக்கை கழன்று விழுந்தது. அந்தப் படுக்கையில் பயணிகள் யாரும் பயணிக்காத நிலையில் கீழே அமர்ந்திருந்த பயணிகள், மிடில் பெர்த் கீழே விழுந்ததால் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து ரயில்வே மருத்துவ உதவி மையத்துக்கு தகவல் தரப்பட்டது. இதனடிப்படையில் மொரப்பூரில், காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த பயணி ஒருவர், ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த ரயில்வே நிர்வாகம், மிடில் பெர்த் சரியாக பூட்டப்படாமல் இருந்ததுதான் இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஆகையால் ரயில் பயணிகள், இத்தகைய படுக்கைகள் சரியாக பூட்டப்பட்டுள்ளதாக என்பதை சரிபார்த்துவிட்டு பயணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.