வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் இ-பாஸ்போர்ட்டுகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட உள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்த இ-பாஸ்போர்ட்டுகள் மூலம் அடையாள திருட்டையும் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் வெளிநாடுகளுக்கு செல்வது முடியாத ஒன்றாக இருந்தது. அந்த நேரத்தில் வெளிநாடுகளுக்கு விமானங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்புகள் உலகளவில் கட்டுக்குள் வர தொடங்கியதும், ஒவ்வொரு நாடுகளாக வெளிநாட்டு பயனர்களுக்கு விமானங்களை இயக்க தொடங்கின. என்னதான் கொரோனா நெறிமுறைகளுடன் வெளிநாடுகளுக்கு விமானங்கள் சென்று கொண்டிருந்தாலும், தொற்று பரவல் அச்சத்தால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலக அளவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நம் நாட்டில் இருந்து சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ-பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜூன் 24 ஆம் தேதி பாஸ்போர்ட் சேவை தினத்தை ஒட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணங்களை எளிதாக்கும் வகையிலும், அடையாள திருட்டை கட்டுப்படுத்தும் வகையிலும் இந்திய குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பயணிகளுக்கு பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை சரியான நேரத்தில், திறமையான முறையில் அளிக்க மத்திய பாஸ்போர்ட் அமைச்சகத்துடன் இணைந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பணியாற்றி வருகிறது” என்று தெரிவித்தார்.
