ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறைக்கு எதிராக தமிழக அரசு இன்று (ஏப்ரல் 3) உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. E-pass restriction on Ooty-Kodaikanal
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களில் நாளொன்றுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் இணைந்து ஆய்வு செய்து வருகின்றன.
இந்த சூழலில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து கடந்த மாதம் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி வார நாட்களில் ஊட்டியில் 6000 வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த கட்டுப்பாடுகளால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.
அதோடு வணிகம் பாதிக்கும் என்பதால் நேற்று ஊட்டியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், “எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு செய்து வருகிறது. அதன் பிறகு இது தொடர்பாக முடிவு செய்து கொள்ளலாம். தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. E-pass restriction on Ooty-Kodaikanal