தமிழகத்தில் ஊட்டி , கொடைக்கானல் போல் இனி வால்பாறைக்கும் சுற்றுலா வாகனங்கள் செல்ல நவம்பர் 1 ம் தேதி முதல் இ பாஸ் கட்டாயம் என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த இரண்டு சுற்றுலா தளங்களிலும் இ பாஸ் முறை அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் வால்பாறை ,
அடர் வனப்பகுதிகளின் இடையே மலையின் மீது அமைந்துள்ள சுற்றுலா தலமாக இருந்து வருகின்றது. வால்பாறையில் மலைகளில் அடுக்கடுக்கான தேயிலை தோட்டங்களின் அழகை ரசிக்கவும்,கூழாங்கல் ஆறு , சோலையார் ஆறு அணை, பாலாஜி கோவில் உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிடவும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் நிலையில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இ பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.tnpass.tn.gov.in/home என்ற இணையதளம் மூலமாக இ பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் .
இ பாஸ் இன்றி வரும் வாகனங்கள், பொள்ளாச்சியில் ஆழியார் அணை சோதனை சாவடியிலும்,கேரளாவில் இருந்து வருபவர்கள் சோலையார் அணை இடது கரை சாவடியிலும் இ பாஸ் பதிவு செய்துகொள்ளலாம். இ-பாஸ் பெற்று வருவதை கண்காணிக்க காவல்துறை, உள்ளாட்சித் துறை , வனத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். வால்பாறையைச் சேர்ந்த இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களை வைத்திருப்பவர்கள் https://www.tnpass.tn.gov.in/home இணையதளத்தில் ஒரு முறை மட்டும் பதிவு செய்து உள்ளூர்பாஸ் பெற்றுக் கொண்டால் போதுமானது என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும்,பயன்படுத்தவும் அனுமதி இல்லை” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
