பெரியார் பல்கலையில் ஊழல்!

Published On:

| By Balaji

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 20 ஆண்டுகளாக 47 கோடி ரூபாய்க்கான செலவுக் கணக்கு ஆவணங்கள் ஒப்படைக்காதது தணிக்கை ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில், கடந்த ஒரு வாரமாகத் தணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையில் தணிக்கைக் குழுவினர் தணிக்கை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. அப்போது முதல், கடைசியாகத் தணிக்கை நடத்தி முடிக்கப்பட்ட 2015-2016ஆம் ஆண்டு வரை, 47 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிகளை மீறி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது குறித்தும், பல்வேறு கேள்விகள் தணிக்கை அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளன. அரசின் அனுமதியின்றி குறிப்பிட்ட சிலருக்குச் சம்பளத்தை லட்சக்கணக்கில் வாரி இறைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாக 70 உதவி பேராசிரியர்கள், 17 பேராசிரியர்கள் உள்பட, 104 பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் மணிவண்ணன் கூறுகையில், “பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு என்றும், பல்கலைக்கழக விதிகளின் படியும், சிண்டிகேட் குழு ஒப்புதலுடனும் தான், பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று தெரிவித்தார். தணிக்கைத் தடைகளுக்கு விளக்கம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share