இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்டு 24) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது.
முதலில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். 131 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் தோனி மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தனர். இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர். புவனேஸ்வர் குமார் 53 ரன்னும், தோனி 45 ரன்னும் சேர்த்தனர். புவனேஸ்வர் குமார் 9 ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கி அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார்.

இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் **நான் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது, தோனி என்னிடம் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். டெஸ்ட் போட்டியில் நீங்கள் எப்படி விளையாடுவீர்களோ அப்படி விளையாடுங்கள். இன்னும் ஏராளமான ஓவர்கள் உள்ளன. அதனால் நெருக்கடிக்குள்ளாக வேண்டாம் என்று கூறினார். அதுவே எனது ஆட்டத்திற்கு மேலும் உதவியாக இருந்தது** எனத் தெரிவித்தார்.
