சர்கார் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்றால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பண்டிகை நேரங்களில், முக்கிய காலகட்டங்களில் பிரபலமான நடிகர்களின் படம் வரும் நேரத்தில் ரசிகர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி முன்னர் பிளாக்கில் டிக்கெட் விற்பார்கள். தற்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் விற்பனை என்கிற யுக்தி மூலம் ரூ.500 முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட்டுகளை விற்பதும், கூடுதல் காட்சிகளை ஓட்டுவதும் நடக்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இந்நிலையில், மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தீபாவளியை ஒட்டி, நவ. 6ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் வெளியாகிறது. மதுரையில் ஐந்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூ. 500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. இவ்வளவு கூடுதல் கட்டணம் வசூலிப்பது அப்பட்டமான விதிமீறல்.
சட்டப்படி மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ரூ.50 முதல் ரூ. 150 வரையும், மற்ற திரையரங்குகளில் ரூ.40 முதல் 100 ரூபாய் வரையும், ஏசி திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.80 வரையும் கட்டணம் வசூலிக்கலாம். இந்த அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணம் தொடர்பாக 2017ஆம் ஆண்டில் உள்துறை செயலாளர் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்த போது, 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் திடீர் ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
அதன் அடிப்படையில் இந்த மனு இன்று (நவம்பர் 1) நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் திடீர் தணிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம். சர்கார் படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
