எனக்கு ஃபுல் ஸ்டாப் கிடையாது: தமிழிசை

Published On:

| By Balaji

தமிழக பாஜக தலைவராக இருந்து தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு இன்று (செப்டம்பர் 29) சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பாமக தலைவர் ஜி.கே.மணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

நிறைவுரையாற்றிய ஆளுநர் தமிழிசை,

“நான் தெலங்கானாவுக்கு சென்றிருக்கிறேனே தவிர, தமிழையும் உணர்ந்திருக்கிறேன். நான் ரொம்ப சாதாரணப் பெண். சேலைக்கும், பூவுக்கும், ஜிமிக்குக்கும் ஆசைப்படுகிற சாதாரண பெண். ஆனால் கொடுத்த வேலையை உண்மையாக செய்து முடிக்கிற சாதாரணப் பெண். ஏனென்றால் உழைப்பவர்களை அடையாளம் காட்டினால், செயல்பட துடிப்பவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கும். சாதாரண விஷயத்தை ஒழுங்காக செய்தால் அது அசாதாரணமாக விஷயமாகும். அந்த வகையில்தான் என் உழைப்புக்கு அங்கீகாரமாக ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

முன்பெல்லாம் ஒரு பேட்டி கொடுத்தால் வெளிநாடுகளில் இருந்து கண்டன, கிண்டல் போன்கள் வரும். இப்போது அதே வெளிநாடுகளில் இருந்து, போன் வருகிறது, ‘உங்களால் பெருமைப்படுகிறோம்’ என்று

ஆளுநர் பதவியில் இருப்பதால் ஏதோ நான் ஓய்வில் இருக்கிறேன் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலை 8 மணி முதல் இரவு 9 மணி பணியாற்றுகிறேன். சென்ற அடுத்த நாளே ராஜ்பவனில் அனைவரும் காலை 5.30க்கு எழுந்து கட்டாய யோகா செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துவிட்டேன். பிரதமரின் ஃபிட் இண்டியா மூவ்மெண்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் இல்லாத ஆளுநர் மாளிகையை உருவாக்கி வருகிறேன். நான்ஸ்டாப் ஆக உழைத்துக் கொண்டிருப்பவள் நான். அதனால் எனக்கு என்றும் ஃபுல் ஸ்டாப் கிடையாது” என்று பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார் ஆளுநர் தமிழிசை.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share