உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்தாண்டு 2018இல் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் 3வது தென் மண்டல மாநாடு இன்று ஜூன் 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கூறுகையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் மூன்றாவது தென்மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக திகழச் செய்ய வேண்டுமென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கையின்படி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டில், செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், உலகமே பாராட்டும் வகையில், சென்னையில், உலக முதலீட்டாளர் மாநாட்டை ஜெயலலிதா சிறப்பாக நடத்தியபோது, சிஐஐ-ன் செயல்பாட்டை யாரும் மறக்கமுடியாது. தகவல் தொழில் நுட்பம், உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறை என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த விஷன் 2023 என்ற தொலைநோக்குத் திட்டம், பல்வேறு துறைகளில், தமிழகம் செயல்படுத்த வேண்டிய திட்டங்களையும், இலக்குகளையும் மிகத் துல்லியமாக குறிப்பிட்டுள்ளது.
இந்த இலக்குகளை எய்தவும், நீண்ட நாள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு செல்லவும், அரசுடன் இங்கு வருகை புரிந்துள்ள உங்களைப்போன்ற தொழில் நிறுவனங்களும், தொழில் கூட்டமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அந்த வகையில் இன்று நடைபெறும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2001-இல் தொடங்கி வைத்த connect” என்ற தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த கருத்தரங்கை தமிழ்நாடு அரசும், சிஐஐயும் இணைந்து கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறையில் தமிழகத்தில் தொழில் தொடங்கிட எளிமைப்படுத்தும் வகையில், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களை ஒரே விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். மத்திய அரசு தேசியப் பயனுறு பொருளாதார ஆய்வுக் குழு வெளியிட்ட மாநில முதலீட்டு உள்ளாற்றல் குறியீட்டு அறிக்கையின்படி, நடுத்தர முதலீட்டு முடிவுகளில், அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழகத்தில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, நான்கு பெரிய துறைமுகங்கள், 20 சிறிய துறைமுகங்கள், 7 விமான நிலையங்கள் மற்றும் தடையில்லா மின்சாரம் போன்றவைகள் தமிழகத்தைத் தொழில் முதலீட்டிற்குச் சிறந்த மாநிலமாக வைத்துள்ளது. மேலும், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில், மதுரை – தூத்துக்குடி தொழிற் பெருவழிச்சாலை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தல் வேலை இரண்டு மாவட்டங்களில் நிறைவு பெற்றுள்ளது .
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2011 முதல் 2017 வரை தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்ட முதலீடு 3,07,457 கோடி ரூபாய். இது மட்டுமன்றி, மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து விசாகப்பட்டினம் – சென்னை – தூத்துக்குடி – கன்னியாகுமரி வரை தொழிற் பெருவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது . கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், கையொப்பமிடப்பட்ட ரூ.2.42 இலட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ரூ.62,738 கோடி மதிப்பிலான 61 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. இதன் மூலம் 76,777 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதையடுத்து, அடுத்த உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்தாண்டு 2018ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று முதல்வர் கூறினார்.,”









