லண்டனில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இன்றைய (ஜூன் 8) போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய அணி, 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த வெற்றியின் மூலம் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய அணி, பி பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது.
ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்துவிட்டது. அதன்படி இன்றையப் போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு எதிராக இன்று களமிறங்கும் இலங்கை அணியில் தரங்கா விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளார். கடைசியாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடத் தடைவிதித்துள்ளது கிரிக்கெட் வாரியம். அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி போட்டியில் காயம் காரணத்தால் அவர் விளையாடவில்லை.
இந்திய அணியைப் பொறுத்தவரை அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியெனில் இந்திய அணியில் கடைசி போட்டியில் இடம் பெற்ற ஒரு வீரருக்குப் பதிலாக அஸ்வின் இடம் பெறுவார். பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பந்து வீசாமல் இருந்த ஜாதவ் வெளியேற்றப்படுவாரா அல்லது வேகப்பந்து வீச்சாளர் யாரேனும் வெளியேற்றப்படுவார்களா என்பது போட்டி தொடங்கும்போது தெரியவரும்.
