இந்திய அரசியலில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், எதிர்க்கட்சிகள் பிளவுபடுவதும், அவற்றின் முக்கியத் தலைவர்கள் அல்லது எம்.எல்.ஏ-க்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கைகோர்ப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வக் கொள்கை “வாரிசு அரசியல் ஒழிப்பு” (Dynasty-Free India) என்பதாகும். இதனை ஒருபுறம் மக்கள் மத்தியில் பிரச்சாரமாக முன்வைக்கும் பா.ஜ.க, மறுபுறம் மாநிலக் கட்சிகளில் நிலவும் வாரிசுப் பூசல்களையும், அதிருப்திகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி “சடுகுடு” விளையாடி வருகிறது.
வாரிசு அரசியலால் காவு வாங்கப்பட்டு, பா.ஜ.க-வின் வியூகங்களால் உடைக்கப்பட்ட முக்கியக் கட்சிகளின் கதை..

மகாராஷ்டிராவில் சிவசேனா..
சிவசேனா கட்சியானது பாலசாகேப் தாக்கரேவால் தொடங்கப்பட்டது. அவருக்குப் பிறகு அவரது மகன் உத்தவ் தாக்கரே தலைவரானார்.
2019-ல் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே அமைச்சரானார். மூத்த தலைவர்களை விட, இளம் வயதான ஆதித்யா தாக்கரேவுக்கு சிவசேனாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும், அவரது நண்பர்கள் குழுவின் தலையீடு அதிகரித்ததும் அக்கட்சியின் பல மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
“தாக்கரே குடும்பம் தனது மகனுக்காகவும், முதல்வர் நாற்காலிக்காகவும் கட்சியின் கொள்கைகளை காங்கிரஸ் மற்றும் என்சிபியிடம் அடகு வைத்துவிட்டது” என்ற பிரச்சாரத்தை பா.ஜ.க முன்னெடுத்தது. ஆதித்யா தாக்கரேவின் வளர்ச்சியால் அதிருப்தியில் இருந்த கட்சியின் 2-ம் கட்டத் தலைவரான ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டது.
இதன் விளைவாக ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க ஆட்சி செய்த குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, பா.ஜ.க ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிராவின் முதலமைச்சரானார். அதன் பின்னர் தேர்தல் ஆணையமும் ஏக்நாத் ஷிண்டே தரப்பையே ‘ஒரிஜனல் சிவசேனா’ என அங்கீகரித்து, “வில்-அம்பு” சின்னத்தையும் வழங்கியது.
சிவசேனாவின் கட்சிப் பெயரும் சின்னமும் பால்தாக்கரே குடும்பத்திடம் இருந்து பறிபோனது அரசியல் துயரம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி – NCP
மகாராஷ்டிராவில் சிவசேனா உடைக்கப்பட்ட அதே காலகட்டம்தான்.. இந்தியாவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் சிதறடிக்கப்பட்டது…
சரத் பவாரால் தொடங்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் – என்சிபி கட்சியில், அவரது தம்பி மகன் அஜித்பவார் கட்சியை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். ஆனால், சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை டெல்லி அரசியலுக்குக் கொண்டு வந்து, கட்சியின் செயல் தலைவராக்கினார். அஜித் பவாரை ஓரங்கட்டிவிட்டு, தனது மகளை உச்ச அதிகாரத்திற்குக் கொண்டு வர சரத் பவார் முயன்றதே அந்த குடும்பத்திற்குள் பெரிய பிளவை ஏற்படுத்தியது.
சரத் பவார் குடும்பத்தின் இந்த வாரிசு மோதலை பா.ஜ.க மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. “குடும்ப அரசியலால் திறமையுள்ள தலைவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள்” என்ற பிம்பத்தை உருவாக்கியது.
சரத்பவாருக்கு அடுத்தது யார்? என்ற மோதலில் தவித்துக் கொண்டிருந்த அஜித் பவாருக்கு, பா.ஜ.க உடனடியாகப் பிரதிபலனாகத் துணை முதலமைச்சர் பதவியைக் கொடுத்தது.
இதனால் அஜித் பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களுடன் பிரிந்து சென்று பா.ஜ.க கூட்டணியில் இணைந்தார். சிவசேனா வழக்கைப் போலவே, தேர்தல் ஆணையம் அஜித் பவார் தரப்பையே ‘ஒரிஜனல் தேசியவாத காங்கிரஸ்’ என்று அறிவித்து, அதன் பாரம்பரிய ‘கடிகாரம்’ சின்னத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தது.

பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி
தலித் மக்களின் முக்கியத் தலைவராக திகழ்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், 2020-ல் மறைந்தார். அவர் உயிரோடு இருந்தபோதே தனது மகனான சிராக் பாஸ்வானைக் கட்சியின் தலைவராக்கினார். ஆனால், மூத்தவரான தன்னை மதிக்காமல் சிராக் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக ராம் விலாஸின் தம்பியான பசுபதி குமார் பராஸ் அதிருப்தி அடைந்தார். இதனால் லோக் ஜனசக்தியிலும் வாரிசுகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டி வெடித்தது
2021 ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் லோக் ஜனசக்தி கட்சிக்கு இருந்த 6 எம்பிக்களில், சிராக் பாஸ்வானைத் தவிர மற்ற 5 எம்பிக்களும் பசுபதி குமார் பராஸ் தலைமையில் பிரிந்தனர். சிராக்கைத் தனிமைப்படுத்திய சில வாரங்களிலேயே, பசுபதி குமார் பராஸிற்கு பா.ஜ.க தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இரு தரப்பும் மோதிக்கொண்டதால் கட்சியின் பாரம்பரியச் சின்னமான ‘பங்களா’ (வீடு) சின்னம் முடக்கப்பட்டது. கட்சி இரண்டாகப் பிளவுபட்டது.
ஆனால் மக்கள் செல்வாக்கின் மூலம் சிராக் பாஸ்வான் மீண்டும் தனது அரசியல் பலத்தை நிரூபித்து, 2024 தேர்தலில் கம்பேக் கொடுத்து தற்போது அதே பாஜக கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக உள்ளார்.

மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ்
மேற்கு வங்கம் ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. ஜோதிபாசு போன்ற முதுபெரும் இடதுசாரித் தலைவர்கள் கால் நூற்றாண்டுகாலம் முதல்வராக கோலோச்சிய மேற்கு வங்க பூமியில் இடதுசாரி அரசியலை துடைத்து எறிந்தவர் மமதா பானர்ஜி. காங்கிரஸில் இருந்து வெளியே வந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என தனிக் கட்சி தொடங்கி இடதுசாரிகளின் அரசியலை மேற்கு வங்கத்தில் புதைத்து வைத்தவர் மமதா பானர்ஜி.
கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியை அசைத்துப் பார்க்க எத்தனையோ அஸ்திரங்களை பாஜக ஏவிப் பார்த்தது. ஆனாலும் மமதாவிடம் இருந்து மேற்கு வங்கத்தை பாஜகவால் எளிதாக பறித்துவிட முடியாத நிலைமைதான் இருந்தது.
மமதாவின் அரசியலிலும் வாரிசு அரசியல் தலைதூக்கியது. மமதாவுக்குப் பின் கட்சியை வழிநடத்தப் போவது யார் என்ற இடத்தில் அவரது தம்பி மகனான அபிஷேக் பானர்ஜி கொண்டு வரப்பட்டுள்ளார். அபிஷேக் பானர்ஜிக்குக் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தால் அதிருப்தி அடைந்தே, மம்தாவின் வலதுகரமாக இருந்த சுவேந்து அதிகாரி போன்ற பல முக்கியத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தனர். இன்றைக்கு அந்த சுவேந்து அதிகாரிதான் மேற்கு வங்க முதல்வர்.
மேற்கு வங்கத்தில் ‘அக்கா-தம்பி மகன்’ ஆட்சி நடப்பதாக பா.ஜ.க மிகக் கடுமையான வாரிசு அரசியல் விமர்சனத்தை முன்வைத்தது. வாரிசு அரசியலால் அதிருப்தி அடைந்து வெளியேறும் மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க உடனடியாகத் தஞ்சம் அளித்து, அவர்களுக்குத் தகுந்த பதவிகளையும் வழங்கியது.
அபிஷேக் பானர்ஜி மீது நிலக்கரி கடத்தல் மற்றும் ஆசிரியர் நியமன ஊழல் போன்ற வழக்குகளில் மத்திய ஏஜென்சிகளான ED, CBI மூலம் விசாரணைகளை முடுக்கிவிட்டு, மகாராஷ்டிராவைப் போலவே திரிணாமுல் காங்கிரஸையும் உட்கட்சிப் பூசல் மூலம் பிளவுபடுத்த பா.ஜ.க தொடர்ந்து முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
தற்போது முடிவடைந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் பா.ஜ.க 208 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே பெற்றது.
கட்சி தோல்வியைத் தொடர்ந்து அபிஷேக் பானர்ஜியின் தலைமைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸில் அதிருப்தி வெடித்தது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தித் தலைவரான ரிதாப்ரதா பானர்ஜி தலைமையில், மொத்தம் 80 எம்.எல்.ஏ-க்களில் 58 எம்.எல்.ஏ-க்கள் தனியாகப் பிரிந்து மம்தா பானர்ஜிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தேர்தலில் தோற்றாலும் 80 எம்.எல்.ஏ-க்கள் இருந்ததால் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக மூத்த தலைவர் சோவன்தேவ் சட்டோபாத்யாயை மம்தா பானர்ஜி பரிந்துரைத்தார். ஆனால், அந்தப் பரிந்துரைக் கடிதத்தில் பல எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது
இந்தச் சூழலில், அதிருப்தித் தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தங்களுக்கு 58 எம்.எல்.ஏ-க்களின் (மூன்றில் இரண்டு பங்குக்கும் மேல்) ஆதரவு இருப்பதாகக் கூறி சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்
பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு ரிதாப்ரதா பானர்ஜிக்கு இருப்பதை ஏற்றுக்கொண்ட மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் ரதிந்திர போஸ், ரிதாப்ரதா பானர்ஜியை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளார். அவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கான சாவியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
”தங்களது எம்.எல்.ஏ-க்களை மிரட்டியும், பண பலத்தைப் பயன்படுத்தியும் பா.ஜ.க-வே திரிணாமுல் காங்கிரஸை உடைத்துவிட்டது” என மமதா பானர்ஜி குற்றம்சாட்டுகிறார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டேவை வைத்தும், என்சிபியை அஜித் பவாரை வைத்தும் வாரிசு அரசியலுக்கு எதிராக பா.ஜ.க உடைத்த அதே “மகாராஷ்டிரா மாடல்” வியூகம் தான் தற்போது மேற்கு வங்கத்திலும் ரிதாப்ரதா பானர்ஜி மூலமாக அரங்கேறியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இனி சிவசேனா, என்சிபி போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரும் சின்னமும் மமதாவிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும்.. மமதாவின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கிவிட்டது பாஜகவா? வாரிசு அரசியலா? என்ற பட்டிமன்றம் தொடரவே செய்யும்.
பாஜகவின் வியூகம் என்ன?
- வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட பிராந்தியக் கட்சிகளின் திறமையான, செல்வாக்குள்ள 2-ம் கட்டத் தலைவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர் பதவிகளை வழங்கி ஈர்ப்பது
- எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுப்பது
- பா.ஜ.க-விற்குச் சென்றவுடன் அந்த வழக்குகள் வேகம் குறைவது
- கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க, 3-ல் 2 பங்கு மக்கள் பிரதிநிதிகளைத் திரட்டி, பின்னர் தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒரிஜனல் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் கைப்பற்றி, வாரிசுத் தலைவர்களைத் தனிமைப்படுத்துவது இவைதான் பாஜகவின் தொடர்ச்சியான வியூகங்களாகவே இருந்து வருகிறது.
ஆனால் பா.ஜ.க தரப்பில், “குடும்ப ஆதிக்கத்தாலும், வாரிசு அரசியலாலும் பிராந்தியக் கட்சிகள் தாங்களாகவே பிளவுபட்டு போகின்றன. இதில் பா.ஜ.க-விற்கு எந்த தொடர்பும் இல்லை.. ” என்ற ஒரே பல்லவியை காலந்தோறும் பாடி வருகிறது பாஜக.. இன்றைக்கும் மேற்கு வங்கத்தில் கூட!
”வாரிசு அரசியல் மாநிலக் கட்சிகளுக்குத் தொடக்கத்தில் இனிப்பாக இருந்தாலும், அதுவே அக்கட்சிகளின் அரசியல் தற்கொலைக்கு வழிவகுக்கும் நஞ்சாக மாறிவிடுகிறது என்பதை நடப்பு அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
