கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருண் இன்று (மே 27) சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
சென்னை கொளத்தூர் ராமதாஸ் நகரில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்குச் சொந்தமான 2.10 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு 234 குடியிருப்புகளைக் கட்டி, அதில் 78 குடியிருப்புகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதி தம்பதியினருக்குத் தருவதாகத் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால், ஒப்பந்தப்படி அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய 78 குடியிருப்புகளையும் போலியாகக் கையெழுத்திட்டு, சுமார் 43 கோடி ரூபாய்க்கு வேறு நபர்களுக்கு சந்தோஷ் சர்மா விற்பனை செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் சர்மா, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனைத் தொடர்ந்து, குடியிருப்புகளை ஒப்படைக்காமல் ஏமாற்றிய குற்றத்திற்காக கடந்த 2025-ஆம் ஆண்டில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்தார்.
உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு:
இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “2019 முதல் 2023 வரை நடந்த சம்பவம் தொடர்பாக, 2025-இல் இரண்டு ஆண்டுகள் தாமதமாகக் குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளனர். ஒரே குற்றச் சம்பவத்திற்காகக் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நிலையில், பின்னர் மேலும் இரு வழக்குகளைப் பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தது சட்டவிரோதம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் மனுதாரரான வர்ஷா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, தனது மகளைக் கவனித்துக் கொள்ள சந்தோஷ் சர்மாவிற்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனச் சந்தோஷின் மனைவி கல்பனா மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் கேள்வி – கமிஷனர் ஆஜராக உத்தரவு:
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சந்தோஷ் சர்மாவைக் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அதற்கு உத்தரவிட்ட அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் அருண் (தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர்) நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றச் சம்மனை ஏற்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, அவரிடம் சம்மன் வழங்கச் சென்ற நீதிமன்ற அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் காக்க வைத்த சம்பவத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்ற அதிகாரியைக் காக்க வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு, வழக்கு விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளி வைத்தனர்.









