அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.65 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2011- 2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன். இவர் மீது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோரைப்பாய் வியாபாரி முனுசாமி ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
அதில், “கடந்த 2013-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் வெங்கடேசன் மூலம் சுப்பிரமணியன் எனக்கு அறிமுகமானார். ஆதிதிராவிடர் நலத்துறையில் 80 சமையலர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும், சேலத்தில் 20 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க உள்ளதாகவும், ரூ.3 லட்சம் கொடுப்பவர்களுக்கு ஆணை வழங்கப்படும் என்று என்னிடம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து 20 பேரிடம் இருந்து ரூ.65 லட்சம் பணத்தை வசூல் செய்து கடந்த 2015-ஆம் ஆண்டு அமைச்சர் சுப்பிரமணியனிடம் கொடுத்தேன். இந்தப் பணத்தை அவர் தனது மகள் லாவண்யாவிடம் கொடுத்தார்.
இருப்பினும் அவர் அரசு வேலை வாங்கி தரவில்லை. பின்னர் ரூ.23.50 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதி 41.50 லட்சம் பணத்தை கேட்டபோது அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். எனவே முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேற லெவல் ட்விஸ்ட்… ‘வேட்டையன்’ படத்தின் கதை இதுதான்!
கிண்டியில் பசுமைப் பூங்கா வரவேற்கத்தக்கது… ஆனால்! – அன்புமணி டிமாண்ட்!