“அமலாக்கத்துறை சோதனையில் எதுவும் இல்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள்” என திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று (ஜனவரி 4) தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய ’கின்னஸ் கலைஞர்’ எனும் புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தனம் புத்தக திருவிழாவில் இன்று (ஜனவரி 4) நடைபெற்றது. இந்த புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகிறபோது அண்ணாசாலையில் கூட்ட நெரிசலை பார்த்தேன். காணும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். படிக்கின்ற ஆர்வமுள்ளவர்கள் இப்படி ஒரு இடத்தில் கூட மாட்டார்களா என்று வெகுநாட்களாக எனக்கு ஆசை.

நாங்களெல்லாம் ஒரு காலத்தில் கல்லூரிக்கு நோட்ஸ் வாங்க வேண்டும் என்றால் மூர் மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். இப்போதெல்லாம் அங்கு செல்ல வேண்டிய தேவையில்லை.
எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பேச்சாளர் என கலைஞர் பன்முகத்தன்மை கொண்டவர். எந்த துறையை எடுத்தாலும் அத்தனை துறைகளிலும் சாதனை படைத்தவர்.
அவருக்கு தெரியாத துறையே இல்லை. அவரைப் போல சமய சுத்தமாக விடையளிக்கக்கூடியவர்களை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. சட்டமன்றத்தில் அவரது அசாத்திய திறமையை பார்க்க வேண்டும், அதனை ரசிக்க வேண்டும். எந்தக்காலத்திலும் சுயமரியாதையை விட்டுகொடுக்கக்கூடாது என்று கலைஞர் எங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்” என்றார்.
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பிறகு தனது காரில் ஏறி புறப்பட்ட துரைமுருகனிடம், அமலாக்கத்துறை ரெய்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த துரைமுருகன், “வந்தார்கள். எதுவும் இல்லை என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றார்கள்” என்று பதிலளித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
12 மாவட்டங்கள் ரூ.176 கோடி : தமிழகத்துக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு!