துரைமுருகன் ரெய்டு: பிடிபட்ட இரண்டரை கோடி ரூபாய்… அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் என்ன?

Published On:

| By Aara

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருக்கும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டிலும், அவரது குடும்பத்தினர் நிர்வகிக்கும் கிங்ஸ்டன் கல்லூரியிலும் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தினர்.

ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கிய ரெய்டு, துரைமுருகன் வீட்டில் நேற்று இரவுடன் முடிந்தது. ஆனால் கிங்ஸ்டன் கல்லூரியில் இன்றும் அமலாக்கத் துறையினரின் ரெய்டு தொடர்ந்தது.

இதுபற்றி வேலூர் வட்டாரங்களில் விசாரித்தபோது,

“2019 மக்களவைத் தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசன் என்பவருடைய இடத்தில் பத்து கோடிக்கும் மேல் பணம் ஐ.டி.யால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்தாக ஐ.டி. கருதியது. அப்போது இதனால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த பணம் தொடர்பாக பிறகு அமலாக்கத்துறையும் விசாரிக்கத் தொடங்கியது.

இந்த பின்னணியில்தான் நேற்று துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் கல்லூரி, மற்றும் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது.

சீனிவாசன், தாமோதரன் தொடர்பான இடங்களில் ஜனவரி 3 மாலையே ரெய்டு முடிந்தது. துரைமுருகன் வீட்டில் இரவோடு முடிந்துவிட்டது. ஆனால் கிங்ஸ்டன் கல்லூரியில்தான் நேற்று தொடங்கி இன்று வரை சோதனை நீடித்தது. நேற்று இரவே கல்லூரிக்கு எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அந்த கல்லூரியில் இரண்டரை கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த பணம் பற்றி கேட்டதற்கு கல்லூரி நிர்வாகத்தினர் தரப்பில் இது மாணவர்கள் கட்டணம் செலுத்திய பணம் என பதில் சொல்லியிருக்கிறார்கள். மாணவர்களின் பணம் என்றால் அது ஏன் வங்கியில் செலுத்தப்படாமல் இருக்கிறது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இந்த இரண்டரை கோடி ரூபாய் பணம் பற்றி மேலிட அதிகாரிகளுக்கும் அமலாக்கத்துறையினர் தெரியப்படுத்தியுள்ளனர்” என்கிறார்கள்.

இன்று (ஜனவரி 4) சென்னையில் செய்தியாளர்கள் அமைச்சர் துரைமுருகனிடம் ரெய்டு பற்றி கேட்டதற்கு, “வந்தார்கள், எதுவும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்” என்று பதிலளித்தார்.

துரைமுருகன் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும் கல்லூரியில் இருந்து இரண்டரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில் அமலாக்கத்துறையினர் இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கான மேலிட அறிவுரைக்காக காத்திருக்கிறார்கள்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

சீமான் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share