தென்காசியில் கிராஃபைட்: ஏல அறிவிப்பு விட்ட ஒன்றிய அரசு… போராட்ட அறிவிப்பு விட்ட துரை வைகோ

Published On:

| By Monisha

durai vaiko protest against Graphite tender

durai vaiko protest against Graphite tender

கிராஃபைட் உள்ளிட்ட பல்வேறு வகையான கனிமங்களை எடுக்க மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் அறிவிப்பு மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் இணையதளத்தில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராஃபைட் எனும் கனிமத்தை எடுக்க மின் ஏலம் கோரும் டெண்டர் அறிவிப்பில் தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஒன்றியம் திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குறிஞ்சாங்குளம் கிராமம் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிஞ்சாங்குளம் கிராமப் பகுதிகளில் சுமார் 656.46 ஏக்கர் நிலப்பரப்பில் கிராஃபைட் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, மின் ஏலம் விடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்புக்கு மதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இதை கைவிடக் கோரி போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

டிசம்பர் 10 ஆம் தேதி சென்னை தாயகத்தில் நடந்த மதிமுக நிர்வாகக் குழுவிலும் இப்பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,

அந்தத் தீர்மானத்தில்,

’தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஒன்றியம் திருவேங்கடம் வட்டத்தில் வெள்ளக்கால் பகுதி, நொச்சிப்பட்டி, வேலம்பட்டி வடக்கு, இலுப்பக்குடி, மண்ணடிப்பட்டி, மாருதிப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் வெவ்வேறு வகையான கனிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளுக்கும் மின் ஏலம் விடப்பட்டுள்ளது.

கிராஃபைட் கனிமத்தை எடுக்க முதலில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சுரங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்.

குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட கனிம வளங்கள் கண்டறியப்பட்டு உள்ள கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இதன்மூலம் பாதிப்படையும்.

கிராஃபைட் ஒரு கடினமான கனிமம். இதை உடைத்து எடுப்பதற்கு வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும். இதனால் ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எழும். சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழும்.

கிராஃபைட் கனிமம் எடுப்பதால் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழுவதுடன் மனிதர்களின் உடல்நலம் சார்ந்த சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது.

கனிமங்களை எடுப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. மனிதர்களையும், சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரும் இவ்வகையான திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு மக்களின் எதிர்கால பாதிப்புகளை உணர்ந்து இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும்.

தென்தமிழ்நாட்டில், விவசாய பூமியாக உள்ள திருவேங்கடம் வட்டம் குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியாமலும், மாவட்ட நிர்வாகத்தையோ, தமிழக அரசையோ கலந்து ஆலோசிக்காமலும் ஒன்றிய அரசின் சுரங்கத்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

கிராஃபைட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க தமிழகத்தில் மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது” என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கிறோம், மீத்தேன், ஷெல் கேஸ் எடுக்கிறோம், ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம், கெயில் எரிவாயு குழாய் பதிக்கிறோம் என்று ஒன்றிய அரசு பல்வேறு நாசகார திட்டங்களை கொண்டு வந்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி சுற்று வட்டார மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்திருக்கிறார்கள். ஏற்கனவே இத்திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களையும் வழக்குகளையும் தமிழ்நாடு மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

கனிமங்களை எடுப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. மக்களையும் சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதிக்கிற வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரும் இத்திட்டங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு மக்களின் எதிர்கால பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும்.

தென் தமிழகத்தில் விவசாய பூமியாக உள்ள திருவேங்கடம் வட்டம் குறிஞ்சாங்குளம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியாமல் மாவட்ட நிர்வாகத்தையோ தமிழ்நாடு அரசையோ கலந்து ஆலோசிக்காமல் ஒன்றிய அரசின் சுரஙக்த்துறை தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது கண்டிக்கத் தக்கது.

தமிழகத்தில் கனிம வளம் எடுக்க மின் ஏலம் கோரும் ஒன்றிய அரசின் முயற்சி உடனடியாக கைவிடப்பட வேண்டும். தொடக்கத்திலேயே ஒன்றிய அரசு இம்முயற்சியை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் மதிமுக ஈடுபடும் சூழல் உருவாக வேண்டும்” என்று எச்சரித்துள்ளார் துரை வைகோ.

ஏற்கனவே தென் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ போன்ற விவகாரங்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தென் தமிழகம் முழுதும் நடைப் பயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார்.

இப்போது தென்காசி மாவட்டத்தில் கனிம வளத்தை எடுக்க ஒன்றிய அரசு முயற்சிக்கும் நிலையில்… வைகோவை போலவே தென் தமிழகத்தில் பெரும் போராட்டம் நடத்த துரை வைகோ ஆலோசித்து வருகிறார்.

முதலில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு பயணமாக சென்று மக்களை சந்திப்பது, இத்திட்டத்தின் அபாயத்தை எடுத்துகூறுவது, பிறகு தேவைப்பட்டால் மக்களைத் திரட்டி போராடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார் துரை வைகோ என்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

வண்ண புகைகுண்டு வீச்சு: அமித்ஷாவிற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி!

தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்துக்கே முழு அதிகாரம்… தீர்மானம் நிறைவேற்றம்!

durai vaiko protest against Graphite tender

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share