மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது. அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையிலான மோதலை, இந்த கூட்டத்தில் வைத்து பேசி, இருவரையும் கை குலுக்க வைத்து கட்டியணைக்க வைத்து ‘சுபம்’ போட்டிருக்கிறார் பொதுச் செயலாளர் வைகோ. இந்த கூட்டத்திலும், கூட்டத்துக்குப் பிறகும் மதிமுகவில் என்ன நடக்கிறது?
இருவரது தரப்பில் இருந்தும் சமூக தளங்களில் பகிரப்பட்ட சூடான பதிவுகள்தான் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையிலான இடைவெளியை அதிகமாக்கி, அதில் வெப்ப நெருப்பையும் வளர்த்தன.

இந்நிலையில் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தாயகத்தில் மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய நிர்வாகக் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பே 9.45 மணிக்கே அரங்கத்துக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்துவிட்டார் மல்லை சத்யா.
கூட்டம் 10.30-க்கு தொடங்கியதுமே ஐந்தாறு மாவட்டச் செயலாளர்கள் எழுந்து மல்லை சத்யாவை நோக்கி குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
’சத்யா… உங்க ஆதரவாளர்கள்தான் துரை வைகோவை தாறுமாறான வார்த்தைகளால தொடர்ந்து தாக்குறாங்க… நீங்க இன்னும் திருப்பூர் துரைசாமியோட தொடர்புலதான இருக்கீங்க? ஆனால், உங்ளை சாதி காரணமா ஒதுக்குறதா தொடர்ந்து எழுத வைக்கிறீங்க… செஞ்சி நிலைமை என்னானு தெரியுமா? இஷ்டம் இருந்தா இருங்க… இல்லாட்டி ராஜினாமா பண்ணிட்டு போங்க’ என்று மல்லை சத்யாவுக்கு எதிராக சில மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் பின் பகுதியில் இருந்து குரல் கொடுத்தார்கள்.
ஆனால், மல்லை சத்யா இதையெல்லாம் கேட்டுக் கொண்டே எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார். துரை வைகோவும் குரல் எழுப்பும் மாவட்டச் செயலாளர்களை பார்க்காமல் இன்னொரு பக்கம் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பொதுச் செயலாளர் வைகோ கூட்டத்தை அமைதிப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார்.

திமுகவில் இருந்த காலத்தில் தொடங்கி, கலைஞருடனான தனது நெருக்கம் பற்றியெல்லாம் பேசி… மதிமுக தொடங்கியது, ஸ்டெர்லைட் போராட்டம் என பேசிக் கொண்டே இருந்தார் வைகோ.
“தினமும் கலைஞரோடு காலை அறிவாலயத்தில் வாக்கிங் போவேன். இரவு அவரை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டுத்தான் நான் வீட்டுக்கு போவேன். அப்போது என் மனைவி கூட கேட்பார், ‘இப்ப எதுக்கு வீட்டுக்கு வந்தீங்க…?’ என்று.
அந்த அளவுக்கு 24 மணி நேரத்தில் பெரும் பகுதி கலைஞரோடுதான் இருப்பேன். நான் கலைஞரின் வாரிசு அரசியலுக்காகத்தான் தனிக்கட்சி ஆரம்பிச்சேன் என்று சொல்கிறார்கள். அப்படி அல்ல… என் மீது கொலைப் பழி விழுந்ததால்தான் நான் தனிக்கட்சி தொடங்கினேன்” என்று பழைய கதைகளை பேசியவர் சட்டென நாடாளுமன்றத்தில் துரை வைகோவின் செயல்பாடுகளைப் பற்றி பேசினார்.
“நாடாளுமன்றத்தில் நமது துரை வைகோவின் செயல்பாடுகளை கட்சி பேதமில்லாமல் அனைவரும் பாராட்டுகிறார்கள். அந்த காலத்தில் நீங்க எப்படி பேசினீர்களோ, அதே மாதிரி உங்க ஜூனியர் வைகோவும் பேசுறார்னு என்னிடமே பாராட்டுறாங்க. ஒரு எம்பி மட்டுமே உள்ள கட்சிகளுக்கு நாடாளுமன்றத்துல 3 நிமிடம்தான் கொடுப்பாங்க. ஆனால், ராகுல் காந்தி தன்னோட காங்கிரஸ் கட்சியின் 3 நிமிடத்தை துரை வைகோவுக்கு கொடுத்து, அவரை ஆறு நிமிடம் பேச வைக்குறாரு. அப்படின்னா பாத்துக்கங்க..” என்று வைகோ பேசிக் கொண்டிருக்க, அப்போது துரை வைகோ குறுக்கிட்டு,

‘என்னை பாராட்டுறதுக்காகவா இந்த கூட்டம் போட்டிருக்கோம்? அவரை நீக்குறீங்களா இல்லையா? மாவட்டச் செயலாளர்களுக்கு பதில் என்ன?’ என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் மல்லை சத்யா எழுந்து, ‘‘கட்சியின் நலன் கருதி என்னை கட்சியை விட்டு நீக்க ஜனநாயகப்படி வாக்கெடுப்பு நடத்துங்கள். அந்த வாக்கெடுப்பில் மெஜாரிட்டி கருத்து என்னை நீக்க வெண்டுமென்று வந்தால் என்னை நீக்கிவிடுங்கள். இதுதான் ஜனநாயக மரபு’ என்று பேசி அமர்ந்துவிட்டார்.

அப்போது கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. வைகோ, ‘நமக்குள் ஒற்றுமை முக்கியம்’ என்று சத்தமாக கூறினார். பிறகு துரை வைகோவிடம் திரும்பி, ‘உனது ராஜினாமாவை வாபஸ் வாங்கு’ என்று கூறுகிறார். பிறகு ஆடிட்டர் அர்ஜுனராஜாவுடன் ஆலோசிக்கிறார் வைகோ.
அப்போது சைதை சுப்பிரமணியன், நிஜாம் உட்பட நான்கைந்து மாவட்டச் செயலாளர்கள் மல்லை சத்யாவை நெருங்கி, ‘தலைவர் சொல்றாரு. நீங்க ரெண்டு பேரும் அவருக்கு முக்கியம். துரை நீங்க சொன்னாதான் கேட்பாரு. நீங்க கொஞ்சம் பேசுங்க. அவர் முதன்மைச் செயலாளராக நீடிக்கணும்னு பேசுங்க. ஒரு சாரி கேட்டுருங்க…’ என்று மல்லை சத்யாவை சுற்றி நின்றுகொண்டு அவரிடம் பேசினார்கள்.
அப்போது மல்லை சத்யா எழுந்தார். ‘என்னை விட கட்சி முக்கியம். நான் என்பது சுய நலன். கட்சிதான் பொது நலன். முதன் முதலில் துரை வைகோ கட்சிக்கு வரவேண்டும் என்று பேசியவன் நான். அவர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சகோதரர் துரை வைகோவை பார்த்து நான் கேட்கிறேன்… என்னுடைய எழுத்துகள், உங்கள காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
அதே சமயத்தில் முதன்மைச் செயலாளர் பதவி விலகலை நீங்கள் திரும்ப பெற வேண்டும். நான் எப்போதும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பேன்’ என்று சத்யா பேச வைகோ எழுந்து இருவரையும் தன்னருகே அழைத்து, கை குலுக்க வைத்து கட்டியணைக்க வைத்தார். அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கைதட்டிக் கொண்டே இருந்தனர்.
மல்லை சத்யா, துரை வைகோ இருவரையும் அழைத்த வைகோ… ‘நீங்க ரெண்டு பேரும் தனியா உட்கார்ந்து மனம் விட்டு பேசுங்க’ என்றார். அதன்படியே இருவரும் பேசிவிட்டு வந்தனர். பின் இருவரையும் அழைத்துக் கொண்டு சாப்பிடப் போனார் வைகோ. அதன் பின் சாப்பிட்டுவிட்டுத்தான் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வைகோ.
இந்த கூட்டம் நடந்து முடிந்த மறுநாள் நேற்று ஏப்ரல் 21 ஆம் தேதி, தனக்கு ஆதரவாகவும், மல்லை சத்யாவுக்கு எதிராகவும் சமூக தளங்களில் தொடர்ந்து கருத்துகளை எழுதி வருகிற சத்தியகுமாரனை சென்னை அண்ணா நகர் வீட்டுக்கு அழைத்தார் துரை வைகோ.
இவர்தான், ‘30 வருடமாக கட்சியில் இருந்தாலும் 300 வருடமாக கட்சியில் இருந்தாலும் துரை வைகோதான் அடுத்த தலைவர்’ என்று எழுதியவர். அதுமட்டுமல்ல… ‘இப்போது வாழும் வைகோ, அடுத்து துரை வைகோ, அடுத்து வருண் வைகோ’ என்று துரை வைகோவின் மகன் வருண் வைகோவையும் இந்த விவாதத்தில் இழுத்துவிட்டவர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான சத்தியகுமாரன் விபத்தில் சிக்கி ஆறு மாத காலமாக நடக்க முடியாமல் இருக்கிறார். அவரை வீட்டுக்கு அழைத்து, ‘இனி இதுபோன்ற பதிவுகளை எல்லாம் போடாதீங்க. வருணையெல்லாம் எதற்காக இந்த விவகாரத்தில் எழுதுறீங்க. உங்க பிழைப்பை பாருங்க’ என்று அக்கறையோடு அட்வைஸ் செய்து அனுப்பியிருக்கிறார் துரை வைகோ.
இதற்கிடையே இன்று (ஏப்ரல் 22) மல்லை சத்யாவின் திருமண நாள் என்று கூறி அவருக்கு அவருடைய ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்து பதிவுகளை இட்டு வருகின்றனர்.
உடனடியாக இதற்கு பதில் சொல்லியுள்ள மல்லை சத்யா, “இன்று 22- 04- 25 செவ்வாய்க் கிழமை முகநூல் பக்கத்தில் சிலர் என்னுடைய திருமண நாள் என்று பதிவிட்டு இருக்கின்றீர்கள். அது தவறு.
தீர ஆராயாமல் விசாரிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் போடும் இது போன்ற பதிவுகளால் தான் தேவையற்ற விமர்சனங்கள் வருகிறது. எனவே அருள் கூர்ந்து என்னுடைய பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துக்களை போடவேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
இயக்கத்தை வெற்றிச் சமவெளிக்கு கொண்டு வர நாளும் களமாடி வரும் திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் வைகோ எம்பி, கழகத்தின் முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ எம்பி அவர்களின் பணிகளுக்கு உறுதுணையாக தோள் கொடுப்போம், துணை நிற்போம். எதிர் வரும் 26 – 04 – 2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய தீவிர பணிகளை முன்னெடுத்து செல்லுங்கள், வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், “என்னதான் ஏப்ரல் 20 ஆம் தேதி இப்பிரச்சினை முடிந்திருந்தாலும், இது தற்காலிகமான தீர்வுதான். அந்த கூட்டம் முழுதும் துரை வைகோவின் முகக் குறிப்பைப் பார்த்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்” என்கிறார்கள் துரை வைகோவுக்கு நெருக்கமானவர்கள்.
இதை வலுப்படுத்துவது போல தான் முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினமா செய்ததை வாபஸ் பெற்ற நிர்வாகக் குழு கூட்டம் குறித்தோ, மல்லை சத்யாவுடன் மனக் கசப்பு நீங்கியது குறித்தோ தனது சமூக தளப் பக்கத்தில் ஒரு வார்த்தை கூட பதிவிடவில்லை துரை வைகோ.

தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பதிவேற்றியவர், அடுத்ததாக நேற்று முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பிறந்தநாளுக்காக அவரை வாழ்த்திட சென்றதைதான் பதிவு செய்திருக்கிறார். இடையில் ஏப்ரல் 20 ஆம் தேதி நடந்த மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் பற்றி எந்த பதிவையும் துரை வைகோ இடவில்லை. வரும் ஜூன் மாதம் மதிமுகவின் பொதுக்குழு கூட இருக்கிறது. அதில் துரை வைகோ வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
மல்லை சத்யா தரப்பிலும் அவருடைய மனக் காயத்துக்கு இன்னும் தக்க மருந்திடப்படவில்லை என்கிறார்கள்.
எனவே ஏப்ரல் 20 இல் நடந்தது தற்காலிக ஏற்பாடுதான் என்பதே, மதிமுகவின் உள் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் ஒற்றைத் தகவல்!