டன்கி: விமர்சனம்

Published On:

| By Selvam

Dunki Movie Review

ஒன்றாகப் பீறிடும் அழுகையும் புன்னகையும்..!

’பீல்குட்’ படங்களில் சோகமான காட்சிகள் நிச்சயம் இருக்கும். அதேநேரத்தில், அந்த சோகத்தையும் சுகமானதாக மாற்றிக்காட்டும் வகையில் காட்சிகளும் திரைக்கதை ட்ரீட்மெண்டும் இடம்பெற்றிருக்க வேண்டும். அதுவே தலையாய நியதி.

ADVERTISEMENT

அதனைச் சிரமேற்கொண்டு, ஒரே நேரத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கதைகளைத் திரையில் வெளிக்காட்டியவர் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. முன்னாபாய் எம்பிபிஎஸ், லஹே ரஹோ முன்னாபாய், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு ஆகிய ஐந்து படங்களை அவர் இயக்கியிருக்கிறார்.

அந்த படங்கள் இந்திய சினிமாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவரது ஆறாவது படமாக வெளியாகியிருக்கிறது ‘டன்கி’.

ADVERTISEMENT

இதில் ஷாரூக்கான், டாப்சி பன்னு, விக்கி கௌஷல், பொமன் இரானி உட்படப் பலர் நடித்துள்ளனர்; ப்ரீதம் இதற்கு இசையமைத்துள்ளார்.

தரை வழியாகவும், கடல் வழியாகவும் எல்லைகள் தாண்டி, சட்டவிரோதமாக மேற்கத்திய நாடுகளில் குடியேறத் துடிப்பவர்களைப் பற்றிப் பேசுகிறது இப்படம். கூடவே, தாய்நாட்டை விட்டு வேறிடம் செல்ல வேண்டிய நிலைமையின் பின்னணியையும் சொல்கிறது.

ADVERTISEMENT

இப்படிப்பட்ட கதையை வேறொரு இயக்குனர் கையிலெடுத்திருந்தால், அது கண்ணீர் காவியமாக மலர்ந்திருக்கும். ஆனால், ராஜ்குமார் ஹிரானியின் முந்தைய படங்களைப் பார்த்தவர்களால் ‘டன்கி’யை அப்படிக் கருத முடியாது. காரணம், அவரது  படங்கள் சிரிக்க வைக்கும்; அழ வைக்கும்; நெகிழ வைக்கும்; தியேட்டரை விட்டு வெளியேறுகையில், ‘ஒரு நல்ல படம் பார்த்தோம்’ என்ற திருப்தியைப் பெருகச் செய்யும்.

‘டன்கி’யும் அதனைச் சாதிக்கிறதா?

பிரிட்டனில் வேலை!

பிரிட்டன் நாட்டில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மனு ரந்த்வா (டாப்ஸி பன்னு). அங்கிருந்து நழுவித் தப்பிப்பவர், நேராகச் சென்று தனக்குத் தெரிந்த வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்கிறார். ‘நான் இந்தியா செல்ல வேண்டும்’ என்கிறார். அவரோ, ‘உலகில் வேறு எந்த நாடுகளுக்குச் செல்லவும் நான் உதவி செய்வேன். இந்தியா செல்ல உதவ முடியாது’ என்று கைவிரிக்கிறார். அதையடுத்து, இருபத்தைந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தனது காதலரான ஹார்டி சிங் (ஷாரூக் கான்) உதவியை நாட முற்படுகிறார்.

பஞ்சாப்பில் லால்து பகுதியில் வசித்துவரும் ஹார்டி சிங், நெடுங்காலம் கழித்து மனுவின் குரலைக் கேட்டதும் உருகி விடுகிறார். இந்திய தூதரகம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்று தெரிந்ததும், துபாய் சென்று அவரைச் சந்திக்க முற்படுகிறார்.

இதற்கிடையே, லண்டனில் இருக்கும் மனுவின் நண்பர்களான பக்கு லகன்பால் (விக்ரம் கோச்சார்), பல்லி கக்கட்டை (அனில் குரோவர்) இருவரும் தங்களது உடைமைகளை விற்றுவிட்டு இந்தியா செல்லத் தயாராகின்றனர். அவர்களாலும் இந்தியாவுக்குள் நுழைய முடியாத நிலைமை.

Dunki Movie Review

அப்படி அவர்கள் மூவரும் என்னதான் செய்தார்கள்?

1995ஆம் ஆண்டு. லால்துவில் குடும்ப வறுமையால் கஷ்டப்பட்ட மூவரும் லண்டன் சென்று சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். அதற்கான விசா பெறும் முயற்சியில், தவறான ஏஜெண்டுகளை நாடிப் பணத்தை இழக்கின்றனர். அந்த காலகட்டத்தில்தான், மனுவுக்கு ஹார்டி சிங் அறிமுகமாகிறார். அவரது உதவியால் மல்யுத்தம் கற்கும் மனு, ஒரு ஆங்கிலப் பயிற்சி நிலையத்திலும் சேர்கிறார்.

அங்கு தான் மனு, ஹார்டி, பல்லி, பக்கு டீமுக்கு சுகி (விக்கி கௌஷல்) அறிமுகமாகிறார். பெற்றோரின் மிரட்டலால் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்ட தனது காதலி, லண்டனில் கணவனிடம் வதைபடுவதை அறிந்து அவரை மீட்க விரும்புகிறார் சுகி. அதற்காகவே, மூன்று மாதத்தில் ஆங்கிலம் கற்றுக்கொண்டு லண்டனுக்குச் செல்ல முயற்சிக்கிறார்.

ஆனால், பிரிட்டன் தூதரகம் நடத்தும் விசா பெறுவதற்கான நேர்காணலில் சுகி உட்பட அனைவரும் தோற்கின்றனர். பல்லி மட்டுமே ‘மாணவர் விசா’வில் பிரிட்டன் போகிறார். அங்கு சுகியின் காதலியைச் சந்திக்கச் செல்கிறார். அப்போது, அவர் கேள்விப்படும் விஷயம அதிர வைப்பதாக உள்ளது. அதனை அறிந்ததும் சுகி தன்னைத்தானே சிதைத்து உயிரை விடுகிறார்.

சுகியின் அஸ்தியை லண்டனுக்குக் கொண்டு செல்வதற்காக, சட்டவிரோதமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லைகளைக் கடந்து பிரிட்டன் செல்ல முயற்சிக்கின்றனர் ஹார்டியும் அவரது தோழர்களும். அதில் வெற்றி கிடைத்ததா? அப்படி வெற்றி கிடைத்தது என்றால், ஹார்டி மட்டும் ஏன் இந்தியாவில் வசிக்கிறார்?

பெரும் பிளாஷ்பேக்கின் துணையோடு, அக்கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி அனுப்புகிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அந்த வகையில், அழுகையும் புன்னகையும் ஒன்றாகப் பீறிடும் காட்சிகளைத் திரைக்கதையில் நிறைத்துள்ளது ‘டன்கி’.

அசத்தும் டாப்ஸி!

Dunki Movie Review

‘ஆடுகளம்’ படத்திலேயே இயல்பான நடிப்பால் நம்மை அசத்தியவர் டாப்ஸி பன்னு. சில ஆண்டுகளாக, அவர் இந்தியில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். அந்த பேதத்தை மறக்கடிக்கும் வகையில், இதில் அவரது பெர்பார்மன்ஸ் அமைந்துள்ளது.

‘பதான்’, ‘ஜவான்’ படங்களுக்குப் பிறகு மேலும் ஒரு வெற்றிப்படமாக ஷாருக்கை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ‘டன்கி’. அவர் ஹீரோயிசம் காட்டும் இடங்கள் திரைக்கதையில் உண்டென்றபோதும், அதையெல்லாம் தாண்டி சோகத்தையும் அழுகையையும் விரக்தியையும் பிரதிபலிக்கும் இடங்களில் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது அவரது நடிப்பு.

’பொன்னியின் செல்வன்’ படத்திற்குச் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஷாம் கௌஷல் இதிலும் தனது பணியைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறார். அவரது மகன் விக்கி கௌஷல், இதில் கௌரவ வேடத்தில் வந்து போயிருக்கிறார். அந்த இடங்கள் எல்லாமே மிகச்சிறப்பாக அமைந்துள்ளன.

டாப்ஸியின் நண்பர்களாக வரும் விக்ரம் கோச்சார், அனில் குரோவர் இடம்பெறும் காட்சிகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. பொமன் இரானியும் சிறியளவில் அவர்களோடு இணைந்து பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து சிறியதும் பெரியதுமாக சில நூறு பேர்களாவது இப்படத்தில் இடம்பெற்றிருப்பார்கள்.

கால இடைவெளியா, காட்சிகளுக்கேற்ற தன்மையை வெளிப்படுத்தும் கட்டாயமா என்று தெரியவில்லை. இதில் சி.கே.முரளீதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் என்று மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருக்கின்றனர். லால்து நகர செட்களுக்கு நடுவே சுற்றிச்சுழலும் கேமிராவின் நகர்வுகள் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் சுப்ரதா சக்ரபர்த்தி, அமித் ரே மற்றும் கலை இயக்குனர் திலீப் ரோகடே ஆகியோரின் உழைப்பினால் லால்து, லண்டன் நகர வீடுகள் அருமையாகத் திரையில் தெரிகின்றன.

படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ள இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, மிகுந்த கவனத்துடன் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார்.

நீருக்கடியில் நிகழ்வதாக அமைந்த காட்சிகள், துப்பாக்கி மோதல்கள் உட்படப் பலவற்றுக்காக விஎஃப்எக்ஸ் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதுமையால் வற்றிப்போன ஷாரூக்கின் கன்னத்தை புஷ்டியாகக் காட்டுவதும் அதிலொன்றாக இடம்பெற்றுள்ளது.

‘லுட் புட் கயா’ பாடல் மூலமாகத் துள்ளலை விதைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ப்ரீதம்.

மனதை உருகவைக்கும் சோகக் காட்சிகள் மட்டுமல்லாமல், அதனூடே மகிழ்ச்சியை விதைக்கும் இடங்களிலும் பின்னணி இசையால் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார் அமன் பந்த்.

அபிஷித் ஜோஷி, கனிகா தில்லான் கூட்டணியோடு இணைந்து இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். ஆனால், அவரது முந்தைய படங்களில் இருந்த திரைக்கதை நேர்த்தி இதில் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். அது மட்டுமே, இந்த படத்தின் பின்பாதியை ரசிப்பதில் தடைகளை ஏற்படுத்துகிறது.

அதேநேரத்தில், ‘மருந்தை இனிப்பில் தோய்த்து தருவது’ போலப் பல கடினமான விஷயங்களை இதில் எளிதாகச் சொல்லியிருக்கிறார். அந்த இடங்கள் எல்லாமே தியேட்டரில் கைத்தட்டல்களை அள்ளுகின்றன.

Dunki Movie Review

நினைவுக்கு வரும் ‘3 இடியட்ஸ்’!

தமிழில் விஜய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் சரண் இயக்கிய ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ இரண்டும் ராஜ்குமார் ஹிரானியின் படங்களைத் தழுவி உருவானவை. அவை இரண்டுமே, அவரது எழுத்தாக்கமும் காட்சியாக்கமும் வழக்கமான படங்களில் இருந்து எவ்வளவு வேறுபட்டவை என்பதைச் சொல்லிவிடும்.

அந்த வகையில், ‘டன்கி’யின் தொடக்கக் காட்சிகள் ‘3 இடியட்ஸ்’ படத்தை நினைவூட்டுகின்றன. முன்பாதியில் வரும் நகைச்சுவை வசனங்கள், பாத்திரங்களின் மீது அப்பியிருக்கும் சோகம் உள்ளிட்டவை ஏற்கனவே பார்த்த சில படங்களை மனதில் கொண்டு வருகின்றன.

ராஜ்குமார் ஹிரானியின் படங்களில் சிறிய பாத்திரமாக இருந்தாலும், அவற்றின் தொடக்கமும் முடிவும் திரைக்கதையில் மிகச்சீராக வெளிப்பட்டிருக்கும். இதில் பொமன் இரானி பாத்திரம், டாப்ஸி மற்றும் அவரது நண்பர்களின் குடும்பத்தினர் உட்படப் பலரைத் திருப்திகரமாகக் காட்டவில்லை.

முக்கியமாக, நண்பர்களைப் பிரிந்து இந்தியாவில் இருபத்தைந்து ஆண்டு காலம் ஹார்டி எவ்வாறு வாழ்ந்தார் என்பது சொல்லப்படவே இல்லை. ஆனால், கிளைமேக்ஸில் ‘அந்தக் காலம் மட்டுமே தனக்கு டன்கியாகத் தெரிந்தது’ என்கிறது அப்பாத்திரம். இந்தக் கதையில், சட்டவிரோதமாக லண்டனுக்குச் செல்லும் பாதையே ‘டன்கி’ என்று சொல்லப்படுகிறது. எந்நேரமும் ஏதேனும் ஒரு நாட்டின் ராணுவத்தால் சுடப்படலாம் என்ற அச்சம் அதில் பொதிந்திருக்கும். அதையும் தாண்டி, அப்படியொரு பயணத்தை மேற்கொண்டு வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தை நோக்கி இத்திரைக்கதை எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை.

சில விஷயங்களைச் சொல்லாமல் தவிர்த்த இயக்குனர், சிலவற்றைத் தேவையே இன்றி காட்சிகளாகவும் ஷாட்களாகவும் புகுத்தியிருக்கிறார். டாப்ஸியின் சகோதரர் எவ்வாறு இறந்தார் என்று காட்டப்படுவதும் அதிலொன்று.

அனைத்தையும் கடந்து பார்த்தால், படத்தின் தொடக்கமும் முடிவும் நம்மை நெகிழ்ச்சிக்கு ஆளாக்குவதை உணர முடியும். குறிப்பாக, இடைப்பட்ட பகுதியில் சில காட்சிகள் நம்முள் அழுகையையும் புன்னகையையும் ஒருசேரப் பூக்க வைக்கின்றன. அந்த மாயாஜாலத்தை நிகழ்த்திய வகையில், தனது முந்தைய படங்களைப் போலவே ‘டன்கி’யிலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை ராஜ்குமார் ஹிரானி அள்ளுவார் என்று தோன்றுகிறது.

நாட்டின் மீது பற்று வேண்டும் என்று சொன்ன கையோடு, நாடுகளுக்கிடையே எல்லைக்கோடுகளும் கட்டுப்பாடுகளும் எதற்கு என்று கேள்வி எழுப்புகிறார் ராஜ்குமார் ஹிரானி. அந்த முரண்பாட்டை ரசிக்க முடியும் என்பவர்களால் இப்படம் பல நூறு கோடி வசூலை அள்ளும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: அடர்த்தியான புருவங்கள் அமைய வேண்டுமா?

எண்ணூர் எண்ணெய் கழிவு:  உயிருக்குப் போராடும் பறவைகள்!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share