பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் ஜனவரி 21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணி புரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஹெச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்.
அந்த வகையில் இதற்கான தேர்வுகள் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 15-ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.
இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யுஜிசி நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்க கோரி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடந்த ஜனவரி 7 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
அதைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை இயக்குநர் ராஜேஷ் குமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. எனவே, திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் வரும் ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது .
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு. தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!