வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 17) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருவதால், தமிழகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல்லில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவானது சுமார் 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணை முழுக் கொள்ளளவையும் எட்டியதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே, காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டிருப்பதால், மேட்டூர் – பூலாம்பட்டி சாலையை நீர் சூழ்ந்துள்ளது.
மாதையன் குட்டை, ராஜாஜி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஈரோடு, பவானி ஆற்றங்கரையோரங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
அந்த பகுதிகளில் வசிக்கும் 78 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அருகிலுள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீர்காழிக்கு அருகே கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் – வேலூர் மாவட்டங்களை இணைக்கும் பச்சக்குப்பம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
செல்வம்