ADVERTISEMENT

போதையில் இருப்பவருடன் பயணித்தாலும் இனி அபராதம்: அமலுக்கு வந்தது புதிய விதி!

Published On:

| By Kalai

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன்  பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதி இன்று(அக்டோபர் 20) முதல் அமலுக்கு வந்துள்ளது.

சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், புது திட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில், தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி 10,000 அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதிமன்றம் மூலமாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. 

கடந்தாண்டு மட்டும் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவதாலேயே அதிக விபத்துகள் நிகழ்வதால் அதை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று முதல் சென்னையில் புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது. அதாவது  வழக்கமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபரிடம் மட்டுமே போக்குவரத்து போலீசார் அபராதத் தொகை பெற்று வந்தனர்.

ADVERTISEMENT

ஆனால் தற்போது வாகன ஓட்டுனர் குடிபோதையில்  இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

இதன் மூலம் இருவரிடமும் அபராதம் வசூல் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதே போன்று கார் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது

மேலும் தெரிந்த ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனருடன் பயணம் செய்யும் போது அந்த ஓட்டுனர் மதுபோதையில் இருந்தால் பின் அமர்ந்து இருப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும்.

ஆனால் சவாரி செல்லும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  மோட்டார் வாகன சட்டம் 185 r/w 188 MV விதிப்படி இந்த அபராதமானது வசூல் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என தெரிந்து அவர்களுடன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் உடன் பயணிப்பவர்கள் குடித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை போக்குவரத்துக்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கலை.ரா

புயல் அறிகுறி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சொட்டு தண்ணீர்கூட குடிக்காமல் அதிமுக நடத்திய உண்ணாவிரதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share