போதைப் பொருள் வழக்கில் சென்னை போலீசில் ஆஜரான நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய 14 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. Drug Case Actor Krishna
சென்னையில் நட்சத்திர ஹோட்டல் பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பிரசாத் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் பிரதீப்பிடம் இருந்து போதைப் பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிக்கிய பிரதீப்பின் செல்போன் உரையாடல்கள் அடிப்படையில் நடிகர் ஶ்ரீகாந்த் விசாரிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இந்த விசாரணைகளில் நடிகர் ஶ்ரீகாந்த், பிரதீப் மூலமாக போதைப் பொருட்களை வாங்கியதும் அவற்றை பயன்படுத்தியதும் உறுதியானது. இதனால் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் வழக்கில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலரும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் விசாரணைக்காக கிருஷ்ணா ஆஜரானார். அவரிடம் இன்று காலை வரை விடிய விடிய 14 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது தாம் போதைப் பொருட்களை பயன்படுத்தியது இல்லை என நடிகர் கிருஷ்ணா கூறியிருக்கிறார்.