மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மாஸ்கோவில் உள்ள கட்டடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது.
உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்துவருகின்றன.
ஆரம்பத்தில் ரஷ்ய படைகளை முன்னேற விடாமல் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டு வந்த உக்ரைன் படைகள், கடந்த சில மாதங்களாக ரஷ்ய பகுதிகளை குறிவைத்து வான் தாக்குதல்களை நடத்துகின்றன.
இந்த நிலையில், உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது ரஷ்யா இடைவிடாமல் வான் தாக்குதல் நடத்துகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதே நேரம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று தாக்குதல் நடத்திய எட்டு ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்ததாக ரஷிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஐந்து ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, மேலும் மூன்று ட்ரோன்கள் தடுத்து திசைதிருப்பப்பட்டன. இது உக்ரைன் ஆட்சியின் பயங்கரவாத தாக்குதல் என ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதலில் மாஸ்கோவின் பல கட்டடங்கள் சேதமடைந்தன என்றும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும் தாக்குதலில் சேதமடைந்த இரண்டு அடுக்குமாடி கட்டடங்களில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதேநேரம், இந்தத் தாக்குதல்கள் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
