காலை எழுந்தவுடன் தேநீர் குடிப்பது சிலருக்கு பழக்கமாக இருக்கும். பொதுவாக தேநீர் குடிக்கவில்லை என்றால் ஏதோ சுறுசுறுப்பு குறைந்ததைப் போலவே உணர்வு இருக்கும். இப்படி தேநீர் பிரியர்களில் பல வகை உள்ளனர். தினமும் காலையில் எழுந்து தேநீர் குடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் அது உங்களை அமைப்படுத்துகிறது, அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க யோசிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று பிரச்சனை
தேநீரில் காஃபின் மற்றும் டானின்கள் உள்ளதால் அவை நமக்கு புத்துணர்வை தருகின்றன. ஆனால், இவை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கலாம். இதனால் வயிற்றுப்புண், குமட்டல், நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக வாய்ப்புகள் உள்ளன. வெறும் வயிற்றில் டீ குடித்தால் இரைப்பை அழற்சி அல்லது புண்கள் ஏற்படும். இந்த அபாயத்தைக் குறைக்க நீங்கள் டீ குடிப்பதற்கு முன்பு ஒரு லேசான சிற்றுண்டியை சாப்பிடுவது நல்லது.
நீரிழப்பை ஏற்படுத்தும்:
நீண்ட நேரம் தூங்கி காலை எழுந்தவுடன் நமது உடலுக்கு அதிகப்படியான தண்ணீர் தேவை இருக்கும். ஆனால், தண்ணீருக்க பதிலாக தேநீர் அருந்துவது மேலும் உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும். தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும். ஆகவே, தேநீர் அருந்துவதற்கு முன்பாக எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.
வாய் ஆரோக்கியம்:
காலையில் எழுந்தவுடன் நாம் டீ குடிப்பதால் நம் வாய் ஆரோக்கியம் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். தேநீரின் அமிலத்தன்மை, நம் வாயில் இயற்கையாகவே இருக்கும் பாக்டீரியாக்களுடன் இணைந்து, பல்லின் மேலடுக்கை அரிக்கிறது. தேனீரில் அதிக சர்க்கரை கலந்து குடிப்பது பற்களில் குழியை ஏற்படுத்துகிறது. அதனால் பல் மருத்துவரை ஆலோசித்து அதற்கேற்ப தேநீரின் அளவை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
தேநீருக்கு முன் எதையாவது சாப்பிடுங்கள்?
தேநீர் குடிப்பதற்கு முன்பு ஒரு துண்டு ப்ரட், வாழைப்பழம் அல்லது தயிர் என எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஏனெனில் அவை உங்கள் வயிற்றை காஃபினில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. அன்றாடம் காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தி பழக்கப்பட்டவர்கள், அதற்கு பதிலாக கஃபைன் இல்லாத தேநீரை அருந்தி வரலாம். உதாரணமாக மஞ்சள், இஞ்சி, இலவங்கப்பட்டை, மிளகுத்தூள் போன்றவை சேர்க்கப்பட்ட மூலிகை தேநீரை பால் சேர்க்காமல் இனிப்புக்கு பதில் தேன் சேர்த்து சாப்பிடலாம்.
