பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல் தந்தது திராவிட இயக்கம்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா இன்று (மார்ச் 8 ) நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகள் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அவ்வையார் விருதை நீலகிரி கமலம் சின்னசாமிக்கும், பெண் குழந்தை விருதை சேலம் இளம்பிறைக்கும் வழங்கினார். மகளிர் நலனுக்காக சிறப்பாக செயல்பட்ட திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கருணை அடிப்படையில் தமிழரசி, சுபா, சோபியா ஹரிணி, ராஜலட்சுமி ஆகிய பெண்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ இன்றைக்கு நாம் இந்த மகளிர் தின விழாவை பூரிப்புடன் கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை தந்தது பெண்கள்தான். பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல் தந்தது திராவிட இயக்கம்தான் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு பல சிங்கப்பெண்கள் இன்றைய மகளிர் தினவிழாவில் பங்கேற்றுள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் மகளிர் பங்கு மகத்தானது. அரசு துறையில் மகளிருக்கு 40 சதவிகிதிம், உள்ளாட்சித் துறை மகளிருக்கு 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசுதான். டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம், அஞ்சுகம் அம்மையார் கலப்புத்திருமண உதவித்திட்டம் என பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. திராவிட மாடல் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

பேருந்துகளில் மகளிர் இன்றைக்கு இலவசமாக பயணம் செய்கின்றனர் அது மகளிரின் உரிமை. மாதம்தோறும் 600 முதல் 1200 ரூபாய் மிச்சம்.
இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதை விட எத்தனை கோடி பெண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதுதான் நமக்குத் தேவை.
புதுமைப்பெண்கள் திட்டம் மூலம் உயர்கல்வி பயில வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல். நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என்று கூறினார்.
மேலும், பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். வட மாநில பெண் ஒருவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அவர் தேடி வந்தது தமிழ்நாடுதான்.
அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பெண்கள் முழுமையாக சுதந்திரம் அடைந்து விட்டதாக நான் கூற மாட்டேன்.
பல ஆண்களின் மனதில் இன்னமும் பெண்கள் என்றாலே அடிமைதான் என்ற எண்ணம் உள்ளது. அதை மாற்ற வேண்டும்.
மகளிர் தினத்தை பெண்கள் மட்டுல்ல ஆண்களும் கொண்டாடக்கூடிய நாளாக மாற்ற வேண்டும்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: செங்கோட்டையன் மகனுக்கு அண்ணாமலை வலை – எடப்பாடி கொடுத்த பதிலடி!
