பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி மோதல் நீடிக்கும் நிலையில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சென்னை விரைந்துள்ளார். சென்னை பயணத்தை முடித்துவிட்டு ஜூன் 10-ந் தேதி செய்தியாளர்களை சந்திப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். Dr. Ramadoss’s Sudden Chennai Visit! Major Announcement Expected on June 10?
பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் இடையேயான மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற அன்புமணி, வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக தாயாரிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது ராமதாஸ், அன்புமணியை சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று திடீரென தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டார் டாக்டர் ராமதாஸ். அப்போது செய்தியாளர்களிடம், சென்னையில் மகள்கள் இருக்கின்றனர்; பேத்திகள், கொள்ளு பேரன் பேத்திகளைப் பார்க்க செல்கிறேன். 2 நாட்கள் இருந்துவிட்டு தைலாபுரம் வருவேன்; செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 10) செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன் என்றார் ராமதாஸ்.
மேலும், ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் நீண்டகால நண்பர்கள்; அவர்கள் என்னை சந்தித்து பேசினர் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
ராமதாஸ், அன்புமணி இடையேயான சமாதான முயற்சிகளை ராமதாஸ் மகள்கள் ஶ்ரீகாந்தி, கவிதா இருவரும்தான் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னைக்கு ராமதாஸ் பயணம் மேற்கொண்டிருப்பதும் இந்த சமாதான முயற்சிகளின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்கின்றன பாமக வட்டாரங்கள்.