ADVERTISEMENT

உழைக்கும் மக்களின் சமூகப் பொருளாதாரமும் : அம்பேத்கரின் நுண்ணறிவும்!

Published On:

| By Minnambalam Desk

நா.மணி

இன்று (டிசம்பர் 6) பாபா சாகிப் அம்பேத்கர் நினைவு தினம்.

இந்தியாவில் தோன்றிய அரிய மனிதர்களில் அவரும் ஒருவர்.‌ நவீன இந்தியாவின் பொருளாதார களத்தை வடிவமைத்த சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவர். சமூக நீதி, அரசியல் ஜனநாயகம், மற்றும் பொருளாதார சமத்துவம் ஆகிய மூன்றையும் ஒரே நேர் கோட்டில் இணைத்து அதற்கான நெறிகளையும் அறிவியல் பூர்வமாக வகுத்தளித்தவர்.

ADVERTISEMENT

அவரது பொருளாதார சிந்தனைகள், குறிப்பாக உழைக்கும் மக்கள் – தொழிலாளர்கள், நிலமற்றவர்கள், அடித்தட்டு மக்கள், பெண்கள், கிராமப்புற நகர்ப்புற ஏழைகள் ஆகியோரின் விடுதலையை மையம் கொண்டவை.

இன்று நாம் அதிகம் அக்கறை கொள்ளும். எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive development) சமூகநீதி, உழைப்பை மையப்படுத்திய பொருளாதாரம், வளப் பங்கீடு போன்ற அதிக முக்கியத்துவமான கருத்துகள் அம்பேத்கரின் சிந்தனைகளின் நேரடி தொடர்ச்சி. அத்தகைய மாமனிதருக்கு நாம் இழைத்த மாபெரும் துரோகம் அவரை சாதிச் சிமிழில் அடைத்தது.‌ அம்பேத்கர் என்று பெயர் வைத்துக் கொள்ள அஞ்சி நடுங்கும் படி செய்தது.

ADVERTISEMENT

அம்பேத்கரின் பொருளாதார நுண்ணறிவு

அம்பேத்கர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் கூட அவர் போல் பொது நிதி, பணவியல் பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உருவாகவில்லை. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம். லண்டன் பொருளாதாரப் பள்ளியில் முது முனைவர் பட்டம்.
இவ்விரண்டு புலத்தில் முனைவர் என சாதித்தவர்கள் யார் இருக்கிறார்கள்? இந்திய வேளாண்மை அதன் அமைப்பு முறை, வறுமை, வருவாய் வேறுபாடுகள், பொருளியல் கட்டமைப்பு ஆகியவற்றை இளம் வயதிலேயே ஆராய்ந்து அறிந்து கொண்டார். அவர் சிந்தனைகள் ஆதிக்க வர்கத்தை மையம் கொள்ளவில்லை.

ADVERTISEMENT

உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வு, வேதனை, உற்பத்தி, உரிமைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

அம்பேத்கரின் பொருளாதாரக் கோட்பாடு என்ன?

அம்பேத்கரின் பொருளியல் கோட்பாடுகளை இரண்டு கருத்தாக்காங்களில் சுருக்கி விடலாம். சமூகநீதி + ஜனநாயகப் பொருளியல் = அம்பேத்கர் பொருளியல் கருத்துக்கள் என்று எளிமையாக புரிந்து கொள்ளமுடியும்.

சாதி என்பது ஒரு சமூக அமைப்பு மட்டுமல்ல. அது ஒரு பொருளாதார அமைப்பும் கூட. சாதி, வேலைப் பிரிவை மரபுரிமை ஆக்கியது. உழைக்கும் மக்களின் உழைப்பைப் பணக்கார வர்க்கம் கைப்பற்றும் ஒரு பொருளாதார சுரண்டல் அமைப்பாக அது உருப்பெற்றது.

பொருளாதார ஜனநாயகமும் அரசியல் ஜனநாயகமும்

அம்பேத்கர் அன்று விடுத்த எச்சரிக்கை தலைமேல் தொங்கும் கத்தியாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ” அரசியல் ஜனநாயகம் பெற்றுவிட்டோம். சமூக ஜனநாயகமும் பொருளாதார ஜனநாயகமும் இல்லாமல் அரசியல் ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாது” என்ற அவரது வார்த்தைகளை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து அவரது எச்சரிக்கைக்கு காது கொடுக்க வேண்டும்.

வாக்குரிமை மட்டும் கொடுத்தால் போதாது.‌

உற்பத்தியை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?

செல்வத்தை (wealth ) யார் பகிர்ந்து கொள்கிறார்கள்?

எல்லோருக்கும் வேலை பாதுகாப்பு இருக்கிறதா?

அனைவருக்கும் கல்வி-சுகாதாரம் கிடைக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு கிடைக்கும் பதிலே உண்மையான ஜனநாயகம். இல்லையெனில் அது வெறும் ‘ஆட்சி மாற்றம்’ என்றார்.

நிலச் சீர்திருத்தங்கள்

உழைக்கும் மக்கள் குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்கள், நிலமற்றோர், சிறு குறு விவசாயிகள் இன்றும் அனுபவிக்கும் துன்பங்களை அம்பேத்கர் நூற்றாண்டுக்கு மதிப்பீடு செய்தார்.

இந்திய விவசாயம் மிகச் சிறு நிலப்பகுதிகளாகப் பிளவுபட்டுள்ளது. உற்பத்தி திறன் மிகவும் குறைவு. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். வேளாண்மையில் சோசலிசம் வேண்டும். அனைத்து விவசாய நிலங்களையும் அரசு தேசியமயமாக்க வேண்டும்.

விவசாயம் கூட்டுறவு முறையில் இயங்க வேண்டும். நிலத்தில் கஷ்டப்பட்டு உழைப்போருக்கே அதன் மீது உரிமை வேண்டும்.அதிலிருந்து வரும் வருவாய் செல்ல வேண்டும் என்றார். வேளாண்மை நெருக்கடிகள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் காலகட்டத்தில் அவரது சிந்தனைகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகள்

இந்தியாவில் 8 மணி வேலையை கொண்டு வந்தவர் அம்பேத்கர் (Factories Act திருத்தம் –1942).இது உழைக்கும் மக்களின் வரலாற்றிலேயே மிகப் பெரிய வெற்றி. ஆண் பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அவர் அழுத்தம் திருத்தமாக முன் வைத்தார். தொழிலாளர்களுக்கு காப்பீடு வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.

வருங்கால வைப்பு நிதி அவசியத் தேவை என்றார். தொழிலாளர்கள் நலன்களுக்கு அடித்தளம் இவை. சாதி அமைப்பு, உழைக்கும் மக்கள் உருவாக்கும் மதிப்பை (value) கைப்பற்றும். இந்தப் பொருளாதார இயந்திரம், கரத்தால் உழைப்போரை தாழ்ந்த சாதியாகவும, கருத்தால் உழைப்போரை மேல்சாதி என பிரித்தது பொருளாதார அடிமைத்தனத்தை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டே செல்லும்.

தீர்வுதான் என்ன?

இடஒதுக்கீடு என்ற‌ வடிவம், சாதியத்தின் மீதான ஆதிக்கத்தை தளர்த்தும் பரிகாரங்களில் ஒன்று. ஒருவகை மறு பங்கீடு. கல்வி, தொழில், சொத்துரிமை ஆகியவை விடுதலைக்கான கருவிகள் என்றார் டாக்டர் அம்பேத்கர்.

பொதுத்துறை உருவாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம், அனைவருக்கும் கல்வி, நிதி பங்கீடு அரசின் கடமையாக இருக்க வேண்டும் என்றார்.

1964ல் மேற்கொள்ளப்பட்ட வங்கிகள் தேசியமயத்தை அன்றே அவர் வலியுறுத்தினார். வருவாய் பிரிவுக்கு தக்கவாறு கட்டண முறைகள் இருக்க வேண்டும் என்றார். பணவீக்கம் கட்டுக்குள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றி பேசினார். செல்வப் பகிர்வில் கையாள வேண்டிய முறைகள் இன்றைய சூழலில் அதிகம் கவனம் பெற வேண்டியவை.

அனைவருக்குமான குறைந்த பட்ச அடிப்படை வருவாய் பற்றி உலக அளவில் வலுவாக பேசப்படுகிறது. அதனை அன்றே பேசியவர் அம்பேத்கர். அதேபோல் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் பற்றி விரிவாக பேசுகிறோம். இழந்ததை மீட்கவும் புதிய சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கும் வாதிடுகிறோம். இது குறித்து அம்பேத்கர் வலுவாகப் பேசினார். பொதுத் துறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஆழமான கருத்துக்களை முன் வைத்தார். தொழிலாளர் உரிமைகளுக்கும் அம்பேத்கர் தத்துவங்கள் அடித்தளம் கண்டுள்ளது.

வளர்ச்சி யாருக்காக?

வளர்ச்சி வளர்ச்சி என்று பேசுகிறோம். அது யாருக்கான வளர்ச்சி என்பது மிக முக்கியமான கேள்வி. வளர்ச்சி உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை உருவாக்கினால் தான் அதன் பெயர் ‌வளர்ச்சி என்றார். தானாக உழைக்கும் மக்களின் நிலையை மேம்படுத்த தக்கதாக வளர்ச்சித் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அரசின் கடமை என்றார்.

வாக்குரிமையின் பயன் என்ன?

வாக்குரிமை உண்டு. ஆனால் பசி அகலவில்லை. கடன் தொல்லை அகலவில்லை. செய்யும் தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை. கல்லாமையை அகற்ற முடியவில்லை. ஆரோக்கியம் தன்மையிலிருந்து மீள் முடியவில்ல
என்றால் அவன் ஒரு ஜனநாயக குடிமகன் இல்லை என்றார்.

பொருளாதார ஜனநாயகத்தின் மூன்று தூண்கள்

உழுபவனுக்கு நிலம் வேண்டும். உழைக்கும் மக்களுக்கு உழைப்புக்கு ஏற்ற கௌரவம் வேண்டும். கூட்டு உரிமை முறை. கூட்டுறவு உற்பத்தி முறை. உரிமைகள் நிறைந்த நல அரசு. இவையே பொருளாதார ஜனநாயகத்தின் மூல வேர்கள்.

நவீன இந்தியாவிற்கான அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகள்

வருவாய் வேறுபாடுகள் என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர் நல சட்டங்கள் தூக்கி எறியப்படுகிறது. ஜிக் எக்கானமி என்ற எந்த வரம்பும் இன்றி தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறது.

குறைந்த பட்ச கூலி ஏட்டளவில் இருக்கிறது. வேலையின்மை அதிகரிப்பு கூலிக் குறைப்பை எளிதாக்குகிறது. விவசாய நெருக்கடி உச்சம் தொட்டுள்ளது. முறைசாரா தொழில் என்பதே முறையாகிவிடும் நிலை உருவாகியுள்ளது. சாதிப் பிரச்சினை புதிய வடிவங்களை எடுக்கிறது

இந்த சூழலில், அம்பேத்கரின் பொருளாதார தத்துவங்கள் வாசித்து விட்டு கடந்து செல்லும் கடந்த கால வரலாறாக நின்றுவிடாது. அவை சமகால வாழ்வியல் நெருக்கடிகளைத் தீர்க்கும் வழிகாட்டியாக விளங்கும். அம்பேத்கரின் பொருளாதாரக் கோட்பாடுகள் விடுதலைக்கு வழிகாட்டும் அரசியல் பொருளாதார தத்துவம்.

அம்பேத்கரின் பொருளியல் தத்துவம் ஜிடிபி வளர்ச்சியை மட்டும் காட்டி மாய்மாலம் செய்ய வந்த பொருளாதாரம் அல்ல.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவே பிரதான வல்லமை என்று காட்டிக் கொண்டிருக்கும் பொருளாதாரம் அல்ல. ஏற்றுமதி இறக்குமதி கணக்குகள் அல்ல. உழைக்கும் மக்களின் மனித மாண்புகளை உயர்தி்திப் பிடிப்பது. சமூக நீதி, பொருளாதார சமத்துவம், உரிமைகள், செல்வப் பகிர்வு ஆகியவற்றோடு நேரடி தொடர்புடையது.

இந்தியாவின் அரசியல் விடுதலைக்கான திட்டத்தை முன்னெடுத்தவர்கள்‌ மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலைப் போரட்ட வீர்கள். ஆனால் விடுதலை இந்தியாவில் உழைக்கும் மக்களின் சமூகப் பொருளாதார விடுதலைக்கான வரைபடத்தை தீட்டியவர் அம்பேத்கர். இத்தகைய எல்லோருக்குமான மேதையை சாதி சட்டகத்தை உடைத்து “இவர் எனக்கான அம்பேத்கர்” என ஒவ்வொருவரும் எப்போது அவரை கொண்டாடப் போகிறோம்?

கட்டுரையாளர்:

Dr BR Ambedkar - Professor N Mani

நா.மணி, கூடுதல் பேராசிரியர் ஜெயின் பல்கலைக்கழகம் பெங்களூர்.
E-MAIL: tnsfnmani@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share