இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இரட்டை சதத்தை (214) பதிவுசெய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் திரும்பி பார்க்க செய்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் இரு போட்டிகளில் இங்கிலாந்து முதல் போட்டியிலும், இந்தியா இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் மற்றும் ஜடேஜா இருவரின் அசத்தலான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில் அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் பென் டக்கெட் (153) தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா முன்னிலை…
இதனால் 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
எனினும் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களில் வெளியேறிய ஜெய்ஸ்வால், 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சரமாரியாக சிக்சர், பவுண்டரிகளாக பறக்கவிட்டு 122 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதில் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். பின்னர் சிறிது நேரத்தில் தசைபிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் பாதியிலேயே 104 ரன்களுடன் களத்திலிருந்து வெளியேறினார் ஜெயஷ்வால்.
நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்து, 322 ரன் முன்னிலை பெற்றிருந்தது. சுப்மன்(65), குல்தீப்(3) அவுட்டாகாமல் இருந்தனர்.
சிக்ஸர்… பவுண்டரி… ஜெய்ஸ்வால் இரட்டை சதம்!
இந்த நிலையில் இன்று தொடங்கிய 4வது நாள் ஆட்டத்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் 91 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து குல்தீப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தநிலையில் 6வது விக்கெட்டுக்கு காயத்தால் பாதியில் வெளியேறிய ஜெய்ஸ்வாலும், சர்ஃப்ராஸ் கானும் இணைந்தனர்.
https://twitter.com/MunawarKiJanta1/status/1759122701849936001
ஜெய்ஸ்வால் நேற்று விட்ட அதிரடியை இன்று தொடர, சர்ஃப்ராஸ் கான் பொறுமையாக ரன் சேர்த்தார்.
தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரி விளாசிய ஜெய்ஸ்வால் தனது 2வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 3வது வீரர், அதிவேகமாக 2 இரட்டை சதமடித்த முதல் வீரர் (7 டெஸ்ட்), ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்(12) என்ற பல்வேறு சாதனைகளை ஜெயஸ்வால் படைத்துள்ளார்.
https://twitter.com/MunawarKiJanta1/status/1759121862477693074
சர்ப்ராஸ் கான் அரைசதம்!
அதேவேளையில் மறுபுறம் பொறுமையாக அடிக்கொண்டிருந்த சர்ஃப்ராஸ் கானும் அரைசதம் அடித்தார். இதன்முலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனை அவர் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு இமாலய இலக்கு!
மேலும் ஜெய்ஸ்வால் – சர்ஃப்ராஸ் இருவரும் 6வது விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்ததுடன், இந்திய அணியும் 430 ரன்கள் குவித்த நிலையில் 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.
இதன்மூலம் 557 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விமர்சனம் : ஊரு பேரு பைரவகோனா!
’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை!