‘சண்டாளர்’ சாதி பெயரை பயன்படுத்த கூடாது : பழங்குடியின ஆணையம்!

Published On:

| By Kavi

சண்டாளர் என்ற சாதி பெயரை பயன்படுத்தக் கூடாது என்று பழங்குடியின ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.

ADVERTISEMENT

அவர் தனது பேச்சில் “சண்டாளர்” என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருந்தார். இந்தசூழலில் சாட்டை துரைமுருகன் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே சண்டாளர் என்ற ஒரு சமூகம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விளக்கம் அளித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் சண்டாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (ஜூலை 15) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

ADVERTISEMENT

“மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளைச் செய்கின்ற சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்குப் பயன்படுத்துவதும், கலை இலக்கியங்களிலும், திரைப்பட நகைச் சுவைக் காட்சிகளிலும், திரைப்படப் பாடல்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன.

இது, அப்பெயர்களிலுள்ள மக்களையும் அவர்களைப் போன்ற மக்களையும் புண்படுத்தும் செயலாகும். தவிர இது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற எண்ணமும் பொதுச் சமூகத்தில் இல்லை.

பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 இன்படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்தியாவிலும் ‘சண்டாளர்’ என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர் தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48 ஆம் இடத்தில் உள்ளது என்பதையும் இவ்வாணையம் சுட்டிக்காட்டுகிறது.

அண்மைக் காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாகப் பேசப்படுவதைக் காணமுடிகிறது.

எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ ‘சண்டாளர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது.

அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் -1989 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”சிறுபான்மையினருக்கு எங்கள் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை” : செல்லூர் ராஜூ

பாரதத்தின் நுரையீரல் – மத்தியபிரதேசம்

டிரம்ப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் முறை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலும், தமிழ்நாட்டு அரசியல் வரலாறும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share