”அதிமுகவை மிரட்டி பார்க்கும் வேலை வேண்டாம்” : சிதம்பரத்தில் சீறிய எடப்பாடி

Published On:

| By christopher

"Don't threatening AIADMK" : Edappadi

“எங்களை மிரட்டி பார்க்கும் வேலை எல்லாம் வேண்டாம். இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அரியலூர் பகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுகவை மிரட்டி பார்க்கும் வேலை வேண்டாம்!

அப்போது அவர் பேசுகையில், “2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்காது என்று சிலர் பேசி வருகின்றனர்.

அவர்களுக்கு சொல்கிறேன்… அதிமுக பொன்விழா கண்ட கட்சி. அதிமுக இங்க தான் இருக்கும். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டதால் சிலர் மாறி மாறி உளறி கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக தெய்வ சக்தியுள்ள கட்சி. அதிமுகவை அழிக்க நினைத்த பலர் அழிந்து போயுள்ளனர். காற்றோடு காற்றாய் கரைந்து போயுள்ளனர். இது தான் சரித்திரம்.

முக்கியமாக அதிமுகவை அழிக்க நினைத்த சிலர், தற்போது பழத்தைத் தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.

அதிமுகவை மிரட்டி பார்க்கும் வேலை எல்லாம் வேண்டாம். இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவைச் சீண்டி பார்க்காதீர்கள். அதையும் மீறி சீண்டி பார்த்தால், எப்படி இருக்கும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள்.

மக்களின் செல்வாக்கை ஸ்டாலின் இழந்துவிட்டார்!

தமிழ்நாட்டில் 3 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் திமுக மக்களுக்கு ஒரு திட்டங்களையும் கொண்டுவரவில்லை. மகளிர் உரிமைத் தொகையும் அதிமுக கொடுத்த அழுத்தத்தின் பேரில் 27 மாதம் கழித்து தான் கொடுக்கப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின், மக்களை சந்திக்கவே இல்லை. சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதை மட்டுமே முதல்வர் செய்து கொண்டிருந்தார். தேர்தல் காரணமாக தற்போதுதான் தேநீர் கடைக்கு வந்து மக்களைச் சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களின் செல்வாக்கை ஸ்டாலின் இழந்துவிட்டார். அதனால் தான் இந்தியா கூட்டணி என்று பேசி தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். இவர் முன்னிலைப்படுத்த முயற்சித்த போது, அப்போதே அதிலிருந்து நிதிஷ்குமார் விலகிவிட்டார்.

அதிமுகவின் ஸ்டைல் இதுதான்!

பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களை அதிமுக எதிர்க்கவில்லை என்றும், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார் என்றும் ஸ்டாலின் பேசுகிறார்.

மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை பாஜக கொண்டு வந்தால் அதை எதிர்க்கும் திராணி அதிமுகவிற்கு தான் உள்ளது.

பாஜகவை அதிமுக எதிர்க்கவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். அதற்காக பாஜகவினரை சுட்டா வீழ்த்த முடியும்?

எதிர்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கும்போது எதிர்ப்போம்.  பாராட்டும்போதும் பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியில் இருந்தவரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்போது விலகிவிட்டோம். தற்போது கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. மக்களை நம்பி நிற்கிறோம்” என்று எடப்பாடி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது!

அனிதா சம்பத்துக்கு அடித்த ஜாக்பாட்… என்னன்னு நீங்களே பாருங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share