”சனாதன தர்மத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்தவரை, அதனை காக்க வந்தவர் என வரலாற்று உண்மைக்கு புறம்பாக ஆளுநர் பேசியது கண்டிக்கத்தக்கது” என அய்யா வைகுண்டர் தலைமை பதி அடிகளார் கூறியுள்ளார்.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192வது பிறந்தநாள் ஆளுநர் மாளிகையில் நேற்று (மார்ச் 4) கொண்டாடப்பட்டது. அப்போது ’மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு’ என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.
சனாதனத்தை காக்க அய்யா வைகுண்டர் தோன்றினார்!
தொடர்ந்து உரையாற்றிய அவர், “சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் இந்தியாவில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது. எனவே ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார். வைகுண்டரின் கனவை நனவாக்கும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்” என்று அவர் பேசியிருந்தார்.
ஆளுநரின் இந்த பேச்சு அய்யாவழி பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ‘சனாதன தர்மத்தின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து மக்களை பாதுகாக்கவே ’அய்யா வழி’ என சனாதனத்துக்கு எதிரான சமயத்தை அய்யா வைகுண்டர் உருவாக்கினார். அவரை இப்போது வலதுசாரிகள் கபளீகரம் செய்ய பார்க்கிறார்கள். சனாதனத்திற்கு எதிராக சமர் செய்தவரையே சனாதனத்தை காக்க அவதரித்தார் என்று வரலாற்றுக்கு புறம்பாக ஆளுநர் பேசியுள்ளார்’ என பலர் சமூகவலைதளங்களில் குற்றம் சாட்டியிருந்தனர்.
வரலாறு தெரியாமல் வாய் திறக்க கூடாது!
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு அய்யா வைகுண்டர் தலைமை பதி அடிகளார் பால பிரஜாபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து ஆரிய கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பது போல் ஆளுநர் ரவி பேசியுள்ளார்.
அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். சாதியை மறந்து பூமியில் ஒத்த இனமாக வாழ வலியுறுத்தினார். ஆனால் மனுதர்மத்தை ஏற்றிருந்த அரசு தான் அய்யாவை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தியது.
800 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை சரியாக படிக்க வேண்டும். அய்யாவின் வரலாறு தெரியாமல் யாரும் வாய் திறக்க கூடாது.
ஆளுநர் சொல்வது போல் அய்யா வைகுண்டர் சனாதனத்தை காக்க வரவில்லை. மக்களை அதிலிருந்து காக்க வந்தார். அவர்களிடம் இருந்த மடமையை, அறியாமையை போக்க வந்தார்.
தங்களுடைய சுயலாபத்திற்காக யாரும் வரலாற்றை திரித்து பேசக்கூடாது. ஜாதியை வகுத்தவனை நீசன் என கூறும் அய்யா வைகுண்டரை சனாதனத்தை ஆதரித்தவர் என ஆளுநர் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. கண்டிக்கத்தக்கது” என்று தலைமை பதி அடிகளார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விஜய் தேவரகொண்டாவின் “ஃபேமிலி ஸ்டார்” டீஸர் எப்படி..?