கோடை நெருங்க ஆரம்பித்துவிட்டது. அதீத வெயில் காரணமாக உடல்நலப் பிரச்சினைகளும் வரிசைகட்டத் தொடங்கிவிடும். அவற்றில் முக்கியமான ஒன்று, நீர்ச்சத்துக் குறைபாடு (Dehydration).
அது ஏன் ஏற்படுகிறது, அதன் விளைவுகள் என்னென்ன, அதை எவ்வாறு தவிர்ப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள். Don’t Ignore Chronic Dehydration
“உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றாலோ, அருந்தும் தண்ணீரைவிட அதிகமாக உடலிலிருந்து நீர் வெளியேறினாலோ… நீர்ச்சத்துக் குறைபாடு பிரச்னை ஏற்படும்.
வெயிலில் அதிக நேரம் பயணம் செல்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், நீண்ட நேரத்துக்குத் தண்ணீர் அருந்தாமல் இருப்பவர்கள், நீரிழிவுப் பிரச்சினையால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள், வயிற்றுப்போக்குக்கு உள்ளானவர்கள், அதிக தூரம் நடப்பவர்கள், நீண்ட தூரம் மாரத்தான் ஓடுபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு, நீரிழப்பால் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால், சருமப் பிரச்சினை, கேசப் பிரச்சினையில் ஆரம்பித்து, சிறுநீரகப் பிரச்னை, குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல், உடலில் தாது உப்புகள் குறைவது, தீவிரமான நிலையில் வாதம் (Stroke), அதை கவனிக்காமல் விடும்பட்சத்தில் உயிரிழக்கும் அபாயம் வரை ஏற்படுத்தக்கூடியது நீர்ச்சத்துக் குறைபாடு.
ஒருவர், தேவையான அளவு தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அவர் சிறுநீர் கழிக்கும் நேர இடைவெளியைக் கொண்டு அறியலாம்.
அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒருவர் தன்னிச்சையாக சிறுநீர் கழிப்பதற்குத் தயாராக வேண்டும். வெளியேறும் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.
அடர் மஞ்சள், அல்லது சிவப்பு நிறத்தில் வெளியேறினால் பாதிப்பு என்று அர்த்தம். பொதுவாக, நாக்கை நீட்டிப் பார்க்கும்போது, ஈரத்தன்மையுடன் இருப்பதும் அவசியம். வறண்டு, வெளிறி இருந்தால் அதுவும் நீர்ச்சத்துக் குறைபாட்டின் அறிகுறியே. சரும வறட்சியும் ஓர் அறிகுறிதான்.
ஆரோக்கிய உடல்நிலையில் இருப்பவர்கள், தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் அருந்துவது நல்லது.
ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது, பின்னர் பல மணி நேரத்துக்கு அருந்தாமலே இருப்பது என்றில்லாமல், அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். Don’t Ignore Chronic Dehydration
வீட்டிலிருந்து கிளம்பும்போது கையோடு, பையோடு வாட்டர் பாட்டில் எடுத்துச் செல்வது அவசியம்.”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: அதிக அளவு பப்பாளிப்பழம் சாப்பிடுவது: ஆரோக்கியமா? ஆபத்தா?
பியூட்டி டிப்ஸ்: உங்கள் முகத்துக்கேற்ற மூக்குத்தி எது?
ஹெல்த் டிப்ஸ்: வேண்டாம் சுகர் ஃப்ரீ – எச்சரிக்கும் WHO – என்ன காரணம்?