வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவதற்கு பதிலாக இந்தியாவிற்குள் நடத்தினால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் பிரதமர் மோடி மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் ஆடியோ வாயிலாக உரையாடி வருகிறார்.
அதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று (நவம்பர் 26) மன் கி பாத்தின் 107வது எபிசோடில் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவில் திருமணம் நடத்துங்கள்!
அவர், “தற்போது திருமண சீசன் தொடங்கியுள்ளது. சில வர்த்தக நிறுவனங்கள் இந்த திருமணங்களின் போது சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கும் என மதிப்பிடுகின்றன. திருமணங்களுக்கு ஷாப்பிங் செய்யும் போது, நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆமாம், திருமணம் என்ற தலைப்பு வந்ததிலிருந்து, ஒரு விஷயம் என்னை நீண்ட காலமாக தொந்தரவு செய்கிறது … மேலும் என் இதயத்தில் உள்ள வலியை என் குடும்ப உறுப்பினர்களிடம் நான் தெரிவிக்கவில்லை என்றால், நான் அதை வேறு யாருடன் பகிர்ந்து கொள்வேன்?
இந்த நாட்களில் சில பணக்கார குடும்பங்கள் வெளிநாடு சென்று ஆடம்பரமாக திருமணங்களை நடத்தும் புதிய சூழல் உருவாகி வருகிறது. இது தேவையா?
இந்திய மண்ணில், நமது நாட்டினர், உங்களது உறவினர்களுடன் திருமண விழாக்களைக் கொண்டாடினால், நாட்டின் பணம் நம் நாட்டில் தங்கியிருக்கும். உங்கள் திருமணத்தில் நாட்டு மக்களுக்கு ஏதாவது சேவை செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.
உங்களால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏழை மக்கள் பயன் பெறுவார்கள். ஏன் நம் நாட்டில் இதுபோன்ற ஆடம்பர திருமண விழாக்களை நடத்தக்கூடாது? நீங்கள் விரும்பும் சூழ்நிலை இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்கான சூழ்நிலையை உருவாக்க நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
இது பணக்கார குடும்பங்கள் தொடர்பான தலைப்பு தான், என்னுடைய இந்த வலி அந்த பெரிய குடும்பங்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.
சூரத் திட்டத்திற்கு பாராட்டு!
குஜராத்தின் சூரத் நகரில் தூய்மை மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘சூரத் திட்டம்’ குறித்தும் பிரதமர் பேசினார்.
அவர், “ஸ்வச்சதா ஒரு நாள் பிரச்சாரம் அல்ல, மாறாக வாழ்க்கையின் ஒரு பகுதி. இன்று இந்த முயற்சி தேசிய உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது. இது கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது.
சூரத்தில் இது போன்ற ஒரு பாராட்டத்தக்க முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞர்கள் குழு அங்கு ‘சூரத் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தினை தொடங்கியுள்ளனர்.
இதன் நோக்கம் சூரத்தை தூய்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு சிறந்த உதாரணமாகத் திகழும் வகையில் நாட்டின் முன்மாதிரி நகரமாக மாற்றுவதாகும்.
இந்த முயற்சியின் கீழ், ‘சஃபாய் ஞாயிறு’ அன்று பொது இடங்களையும், டுமாஸ் கடற்கரையையும் சூரத் இளைஞர்கள் முன்பு சுத்தம் செய்தார்கள். பின்னர், தபி ஆற்றின் கரையை சுத்தம் செய்வதில் முழு மனதுடன் ஈடுபட்டார்கள். தற்போது அந்த அமைப்பில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 50,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அடிமட்ட அளவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.” என்று பிரதமர் கூறினார்.
தமிழ்நாட்டை சேர்ந்த சமூக சேவகரால் உத்வேகம்!
தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் வசிக்கும் லோகநாதன் ஜி சிறுவயதில், ஏழைக் குழந்தைகளின் கிழிந்த ஆடைகளைப் பார்த்து அடிக்கடி மனம் கலங்குவார். அதன் பிறகு, அத்தகைய குழந்தைகளுக்கு உதவுவதாக சபதம் எடுத்து, சம்பாதித்ததில் ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்கத் தொடங்கினார்.
பணத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக கழிவறைகளை கூட சுத்தம் செய்துள்ளார் லோகநாதன்.
கடந்த 25 ஆண்டுகளாக முழு அர்ப்பணிப்புடன் அவர் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு லோகநாதன் உதவி செய்திருக்கிறார்.
இதுபோன்ற முயற்சிகளை நான் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். நாடு முழுவதும் நடைபெறும் இதுபோன்ற பல முயற்சிகள் எங்களுக்கு ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டுகின்றன” என்று பிரதமர் மோடி லோகநாதனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
65,000 க்கும் மேற்பட்ட நீர் நிலைகள்!
மேலும், நீர் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் பேசினார். அவர் ”21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று ‘நீர் பாதுகாப்பு. நீரைச் சேமிப்பது என்பது உயிரைக் காப்பாற்றுவது போன்று முக்கியமானது. இதற்கு உதாரணம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டப்படும் ‘அமிர்த சரோவர்’ (நீர் நிலைகள்).
‘அமிர்த மஹோத்சவின்’ போது இந்தியா உருவாக்கிய 65,000 க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் வரவிருக்கும் தலைமுறையினருக்கு பயனளிக்கும். இப்போது இத்தகைய நீர்நிலைகள் எங்கு கட்டப்பட்டாலும், அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது நமது பொறுப்பாகும்” என்றார்.
திறன் வளர்க்கும் பெஜ்ஜிபுரம் யூத் கிளப்!
”கடந்த நான்கு தசாப்தங்களாக திறன் மேம்பாட்டுப் பணிகளில் ஒரு அமைப்பு ஈடுபட்டு வருவதை அறிந்தேன். ’பெஜ்ஜிபுரம் யூத் கிளப்’ என்ற அந்த அமைப்பு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ளது.
திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வரும் பெஜ்ஜிபுரம் யூத் கிளப் இதுவரை சுமார் 7,000 பெண்களுக்கு திறன் பயிற்சி அளித்துள்ளது. இந்த பெண்களில் பெரும்பாலானோர் இன்று சில வேலைகளைச் செய்கிறார்கள்.
இந்த அமைப்பு குழந்தைத் தொழிலாளர்களில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு திறமையை கற்பிப்பதன் மூலம் அந்த தீய சுழற்சியில் இருந்து வெளிவர உதவியுள்ளது.
‘பெஜ்ஜிபுரம் யூத் கிளப்’ குழு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் தொடர்புடைய விவசாயிகளுக்கு புதிய திறன்களைக் கற்றுக் கொடுத்துள்ளது.
இந்த அமைப்பின் இளைஞர் மன்றம் ஒவ்வொரு கிராமத்திலும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல கழிவறைகள் கட்டவும் உதவியிருக்கிறது. திறன் மேம்பாட்டிற்காக இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களையும் நான் பாராட்டுகிறேன்” என்று அவர் கூறினார்.
உலக சந்தையில் லடாக் பாஷ்மினா!
மேலும், லடாக் பாஷ்மினா என்ப்படும் இந்தியாவின் உயர் ரக சால்வை இன்று உலகளவில் பிரபலமடைந்து வருவது குறித்து பிரதமர் மோடி பேசினார். அவர், “லடாக்கி பாஷ்மினா, ‘லூம்ஸ் ஆஃப் லடாக்’ என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது.
லடாக்கில் சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட பெண்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகிறார்கள். டிஜிட்டல் இந்தியாவின் தற்போதைய காலகட்டத்தில், அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் உலக நாடுகளின் வெவ்வேறு சந்தைகளை அடையத் தொடங்கியுள்ளன.
அதாவது நமது உள்ளூர் தயாரிப்பு இப்போது உலகளாவிய பிராண்டாக மாறி வருகிறது. அதன் காரணமாக, இந்த பெண்களின் வருமானம் மேலும் அதிகரித்துள்ளது” என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
குரு நானக் ஜெயந்தி மற்றும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து!
மேலும் பேசிய அவர், “இந்த ஆண்டு இந்தியாவிற்கு வரம்பற்ற சாதனைகளின் ஆண்டாக உள்ளது. நாளை நவம்பர் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் குரு நானக் ஜெயந்தி மற்றும் கார்த்திகை பூர்ணிமா ஆகிய விழாக்களை முன்னிட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் இதுபோன்ற முயற்சிகளை மக்கள் அதிகம் தெரிந்து கொள்வதோடு, மக்களிடையே வானொலி மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மக்களும் தங்களது கூட்டு முயற்சிகளை தன்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்படி நம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் இதுபோன்ற முயற்சிகளை நான் இங்கு வெளிக்கொண்டு வரும்போது அது பலருக்கும் ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் மோடி தனது பேச்சை நிறைவு செய்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கருங்காலி மாலை கொடுத்த நேரு
WorldCup2023: ரோஹித்தின் கைகளிலிருந்து, மார்ஷின் கால்களுக்கு போன உலகக்கோப்பை… காரணம் இதுதான்!