குப்பைகளை கொளுத்த வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை!

Published On:

| By Selvam

குப்பைகளைக் கொளுத்துவதால் பல இடங்களில் பயிர்கள் சேதமாகிறது என்று வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள் அவற்றை கொளுத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குவியும் குப்பை மலையைக் கரைப்பதற்கு மிக எளிய வழிமுறையாக, அவற்றை கொளுத்தி விடும் நடைமுறை பல இடங்களில் உள்ளது. ஏற்கனவே புவி வெப்பமயமாதல், காற்று மாசு என பலவிதமான சுற்றுச்சூழல் சவால்களை சந்தித்து வருகிறோம். குப்பைகளைக் கொளுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு சவால் விடுவதுடன், சுகாதார கேடுகளையும் உருவாக்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் சாலையோர குப்பைகளைக் கொளுத்தும்போது பல இடங்களில் மரங்கள் கருகி பாழாகி விடுகின்றன. இது தவிர புகை மூட்டத்தால் ஏற்படும் விபத்துகள் என பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியில், கொளுத்தப்படும் குப்பைகளால் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், “பகல் நேரங்களில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் குப்பைகள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இவ்வாறு கொளுத்தப்படும் குப்பைகளிலிருந்து காற்றின் மூலம் பரவும் தீ அருகிலுள்ள விளைநிலங்களுக்குப் பரவி பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் போடிப்பட்டி, ஜோத்தம்பட்டி பகுதியில் குப்பையிலிருந்து பரவிய தீயால் பல ஏக்கர் கரும்புப் பயிர்கள் எரிந்து நாசமானது.

ADVERTISEMENT

மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்துக்கு அருகில் குப்பைகள் கொளுத்தப்பட்டதால் கொழுந்துவிட்டு எரிந்த தீ, காற்றின் வேகத்தால் அருகிலுள்ள நெல் வயலையொட்டிய நாணல் புதரில் பரவியது. நல்ல வேளையாக அருகில் செழித்து வளர்ந்திருந்த நெற்பயிர்கள் தப்பியது. இப்போதே விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம். எனவே தயவு செய்து குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துங்கள். ஏற்கனவே விவசாயிகளோடு விதி விளையாடிக் கொண்டிருக்கும் வேதனையான சூழ்நிலையில் நீங்களும் விளையாடாதீர்கள்” என்று  அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராஜ்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெள்ளி விழா காணும் உழவர் சந்தை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share