சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (Domestic LPG) மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை ஜூன் 1-ந் தேதி மீண்டும் உயர்த்தப்பட்டது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மே மாதத்தில் கூட சிலிண்டருக்கு ரூ.993 வரை வரலாறு காணாத அளவில் விலை உயர்த்தப்பட்டது.
தற்போது, பொதுமக்களுக்குக் கூடுதல் அதிர்ச்சியாக, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று ஜூன் 7-ந் தேதி முதல் சிலிண்டருக்கு ரூ29 உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 3 மாதங்களில் செய்யப்பட்ட 2-வது விலை உயர்வு ஆகும்.
இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் 7-ந் தேதி சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டிருந்தது. மார்ச் மாதத்திற்குப் பிறகு ஜூன் 6 வரை விலை மாற்றமின்றி நீடித்த நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 928.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.29 உயர்ந்து ரூ. 957.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை முந்தைய ரூ.913-லிருந்து அதிகரித்து இப்போது ரூ.942.00 ஆக உள்ளது.
வீட்டு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்படும் அச்சம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கண்டனம்
இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையை ₹29 உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி என மக்கள் தவிக்கும் நிலையில் இந்த கூடுதல் சுமை ஏற்றுக்கொள்ள முடியாது.
“அச்சே தின்” என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தியுள்ளனர்.
இந்த அநியாயமான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
