சென்னையில் கடைக்கு சென்று திரும்பிய தம்பதியை நாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நாய்கடி சம்பங்கள் தொடர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் கடைக்கு சென்று திரும்பிய நீலா என்பவரை அதேப்பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவரின் வளர்ப்பு நாய் கடித்தது. இதனைத் தடுக்க சென்ற நீலாவின் கணவர் சுரேஷையும் அந்த நாய் கடித்துள்ளது.
இதனால் காயமடைந்த இருவருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தம்பதிகளை நாய் கடித்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சுரேஷ், “இந்த பகுதியில் நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. எனது மனைவி கடையில் பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் அருகில் வசிக்கும் மல்லிகா என்பவரது நாய் அங்கு இருந்தது. அவர்களிடம் அதனை பிடிக்குமாறு நீலா கூறியும், அது ஒன்றும் செய்யாது என அவர்கள் கூறிவிட்டார்கள்.
இவர் அந்த இடத்தை தாண்டும்போது அந்த நாய் சரியாக இவரது காலில் கடித்துவிட்டது. இதனை பார்த்ததும் அந்த நாயை தடுக்க நான் சென்றேன். என்னையும் கடித்துவிட்டது.
உடனே கீழ்ப்பாக்கம் மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெற்றோம். இதற்கு முன்னதாகவே நாய்கள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது எங்களை நாய் கடித்த பின்னரும் புகாரளித்து விட்டோம். தற்போது வரை அவர்கள் இங்கு வரவில்லை” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய நீலா, “நான் அருகில் உள்ள வீடுகளில் தான் வீட்டுவேலை செய்கிறேன். இந்த பக்கமாக தான் வேலைக்கு சென்று வருவேன். கடைக்கு சென்று வரும்போது அந்த நாய் அங்கு நின்றது. உடனே உரிமையாளரிடம் அந்த நாயை பிடிக்குமாறு கூறினேன்.
அவர்கள், அது ஒன்றும் செய்யாது என்று கூறினார்கள். நான் அந்த இடத்தை தாண்டும் போது சரியாக அது எனது காலில் கடித்து விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று (மே 9) செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “கடந்த சில நாட்களுக்கு முன் நாய் கடித்த 5 வயது சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்கும்போதே வேதனையாக உள்ளது.
நாய்களை வளர்ப்பதற்கு உரிமம் அவசியம். நாய் வளர்ப்பு குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. நாய்கள் ஒருவரை கடித்த பின்னர் உரிமையாளர்கள் இதனை ஒரு விபத்து என்று கூறிவிடுகிறார்கள். நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
23 வகையான வெறித்தன்மை கொண்ட நாய்களை வளர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், அவை மட்டுமே வெறித்தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்று இல்லை, சாதாரண நாய்கள் கூட தற்போது வெறித்தன்மை கொண்டதாக உள்ளது. இதனை நாய் வளர்க்கும் உரிமையாளர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
கடித்த நாய்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாய் கடிக்கு ஆளான சிறுமியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்.
குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே நாளில் மாஸ் லீவ் எடுத்த ஊழியர்கள்… பணி நீக்கம் செய்த டாடா
Gold Rate: வெயிலும் குறையுது… தங்கம் விலையும் குறையுது… எவ்வளவு தெரியுமா?