எடப்பாடி, சீமானுக்கு உதவுவாரா விஜய்?

Published On:

| By Aara

ஜாசன்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை பதிவு செய்திருக்கிறார். 2026 தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவர் கட்சி தொடங்குவது கூட அறிக்கையாகத்தான் வெளிவந்தது. கட்சி பற்றி பெரிதாக அவர் நிருபர்களிடம் மற்றும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவில்லை.

அவர் கட்சி தொடங்குவதற்கு முதல் படியாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவித்து அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார்.

அதைத் தொடர்ந்து இந்த வருடத்துக்கான பரிசளிப்பு விழாவை இன்று (ஜூன் 28) நடத்தியிருக்கிறார் விஜய்.
2026 தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களைக் குறி வைத்துதான் இந்த நிதி உதவி என்ற விமர்சனமும் எழுகிறது.

கட்சி அறிவிப்பு வெளியான போது தன்னை ஜோசப் விஜய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகர் விஜய் இப்போது ஜோசப் என்ற பெயரை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார். ஜோசப் என்ற பெயர் தனது வாக்கு வங்கி அரசியலுக்கு தடையாக இருக்குமோ என்ற அச்சம் இப்போதே அவருக்கு வரத் தொடங்கி இருக்கிறது என்பதாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

அதே போல் இப்போது நெற்றியில் பொட்டு வைத்த படங்கள் கொண்ட லெட்டர் பேடுகளில் தான் அவர் அறிக்கை வெளியாகிறது. எனவே தேர்தலுக்கான திட்டமிடலில் அவர் நிதானமாக காய் நகர்த்துவது தெரிகிறது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் பற்றி கருத்து வெளியிட்டபோது அரசாங்கத்தின் அலட்சியம் என்று குறிப்பிட்டு இருந்தார். எனவே அவரது அரசியல் நிலைப்பாடு திமுகவுக்கு எதிராக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

எடப்பாடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் விஜய், திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்ற போது அவர்களுக்கு வாழ்த்து சொல்வதை தவிர்த்தார். அதேநேரம் ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும், பவன் கல்யாணுக்கும் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக திருமாவளவன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கூட்டணியே வேண்டாம் தனித்துப் போட்டி என்ற தீர்க்கமான முடிவில் இருந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யுடன் கூட்டணிக்கு , ’ஐ அம் வெயிட்டிங்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். எடப்பாடியும் விஜய்யுடன் கூட்டணிக்கு முயற்சி செய்வதாக அரசல் புரசலாக செய்திகள் வரத் தொடங்கி இருக்கின்றது. விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னார் எடப்பாடி. கிட்டத்தட்ட 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு விஜய் தயாராகி விட்டார் போல் தான் தெரிகிறது.

விஜய்க்கு ஏன் இந்த அரசியல் ஆசை வந்தது? ரஜினி அரசியலுக்கு வருவேன், கட்சி தொடங்குவேன் என்று சொல்லிவிட்டு பல்டி அடித்ததைத் தொடர்ந்து, விஜய்க்கு இந்த அரசியல் ஆசை ஒருவேளை வந்திருக்கலாம்.
ரஜினி பற்றிய விஷயத்துக்கு வருவோம். ரஜினி முதலில் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தார். கட்சி தொடங்குவேன் என்றார். 234 தொகுதிகளிலும் போட்டி போடுவேன் என்றார்.

அவரை நம்பி சர்வ கட்சியிலும் சட்டமன்ற உறுப்பினர், எம் பி, அமைச்சர் ஆசையில் நிறைய பேர் கற்பனையில் இருந்தார்கள். அவரது தொடர்பு எல்லையிலும் இருந்தார்கள். அண்ணாமலை கூட முதலில் ரஜினி கட்சியில் இணைந்து அரசியல் பிரவேசம் நடத்தத்தான் திட்டமிட்டு இருந்தார். ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்று தெரிந்ததும், அவர் பாஜக பக்கம் பார்வையை திருப்பினார்.

திடீரென ரஜினி, ‘நான் அரசியலுக்கு வர மாட்டேன்’என அறிவித்தார். ’எனக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளதால், தேர்தல் பிரச்சாரத்திற்கு அலைந்து திரிந்து உங்கள் உடலை வருத்திக் கொள்வது சரிப்பட்டு வராது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்’ என்பதாக அவர் சொன்ன காரணத்தை இன்று வரை யாரும் நம்பவில்லை.

ரஜினிக்கு எதிராக வேறு ஏதோ உள்குத்து நடந்திருக்கிறது என்ற சந்தேகம் தான் இப்போதும் எல்லோருக்கும் இருக்கிறது. அதே சமயம் ரஜினியின் இந்த பல்டி அவர் மீது கோபத்தையும் பலருக்கு ஏற்படுத்தியது.
மருத்துவர்கள் அலைய கூடாது என்று சொன்னார்கள் என்று ரஜினி காரணம் சொன்னாலும், இப்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மோடி பதவியேற்பு, சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இமயமலை பயணம் என்று சுறுசுறுப்பாக இயங்கும் ரஜினி தேர்தல் பிரச்சாரத்தை காரணம் காட்டி அரசியல் வேண்டாம் என்று சொன்னதை இப்போதும் எல்லோரும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்க்கிறார்கள்.
சரி, ரஜினிக்கு அரசியல் ஆசை ஏன் வந்தது?

ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமை மிக்க இரண்டு அரசியல் தலைவர்கள் இல்லை என்பதால் அந்த வெற்றிடத்தை நிரப்ப, அவருக்கு அரசியல் ஆசையை சிலர் தூண்டி விட்டார்கள். அதனால் கட்சி பற்றிய அறிவிப்பு எல்லாம் வெளியிட்டார். அதன் பிறகு எல்லாமே தலைகீழானது. அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

சமீபத்தில் நிருபர்கள் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்வி கேட்டபோது விட்டால் போதும் என்று நகர்ந்துவிட்டார்.
உண்மையில் அரசியலில் வெற்றிடம் இல்லை என்பது தான் உண்மை. அண்ணாவுக்குப் பிறகு கலைஞர், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் என்று அவரவர் அவர்கள் ஆளுமையை நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

அதற்கு அவர்களின் அரசியல் அனுபவம் ஒரு முக்கிய காரணம் . 2019 பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி, 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி, 2024 பாராளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 என்று ஸ்டாலின் ஆளுமை பளிச்சென்று தெரிகிறது.

இதேபோல் எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி என்பவர் திராவிட அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தான் இப்போதும் இருந்து வருகிறார். எனவே வெற்றிடத்திற்கு இங்கு வேலையே இல்லை. அப்படி இருக்கும்போது ரஜினி, விஜய் இவர்கள் அரசியல் ஆரம்பம் ஏன் எதற்கு என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

எம்ஜிஆருக்குப் பிறகு கட்சி தொடங்கிய சிவாஜி, டி.ராஜேந்தர், பாக்கியராஜ், விஜயகாந்த், இப்போதுள்ள கமலஹாசன் வரை எல்லோருமே அரசியலில் தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறார்கள். எம்ஜிஆர் சினிமா நடிகர் என்ற முத்திரையுடன் கட்சி தொடங்கினார் என்ற இவர்களது நம்பிக்கையே தவறு. முதலில் தேசிய அரசியலில் ஆர்வம் காட்டிய எம்.ஜி.ஆர், அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுகவில் ஐக்கியமானார்.

திமுகவில் தீவிர அரசியலில் அவர் ஈடுபட்டு, பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார், மாநாடுகளில் கலந்து கொண்டார். எம்ஜிஆரின் திரைப்பட வளர்ச்சிக்கு அண்ணா, கலைஞர் உட்பட பல திராவிட கலைஞர்களின் பங்களிப்பு அவரது திரைப்பட வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவி செய்தது. அதேசமயம் அவற்றை சரியாக தனது வளர்ச்சிக்கு எம்ஜிஆர் பயன்படுத்திக் கொண்டார்.

ஒரு பொதுக்கூட்டத்துக்கு சென்று விட்டு பேரறிஞர் அண்ணா திரும்பும் வழியில், விழுப்புரம் அருகே ரயில்வே கேட் மூடி இருந்தது. கேட் திறக்கும் வரை காரில் இருந்து இறங்கி வெளியே வந்து நின்றார் அண்ணா. அவரது காரில் கட்டி இருந்த திமுக கொடியை பார்த்து ‘நீங்கள் என்ன எம்.ஜி.ஆர் கட்சியா?’ என்று அங்கு இருந்த ஒரு விவசாயி கேட்டார்.

அண்ணாதான் திமுக கட்சியை ஆரம்பித்த தலைவர்.. ஆனால் அதையெல்லாம் அண்ணா தன் தலையில் ஏற்றுக் கொள்ளாமல் ‘ஆமாம் நான் எம்ஜிஆர் கட்சி தான்’ என்றார். அதைப் பெருமையாக சம நீதி நாளேட்டில் எழுதவும் செய்தார் அண்ணா.

தமிழ்நாட்டில் காங்கிரசை வீழ்த்தி அண்ணா ஆட்சியைப் பிடித்தார். அவரது மறைவுக்குப் பிறகு கலைஞர் ஆட்சியையும், கட்சியையும் எல்லாரையும் அரவணைத்து நடத்திச் சென்றார். ஆனாலும் எம்.ஜி.ஆர். கட்சியை உடைத்தபோது, ’இதற்குப் பின்னால் காங்கிரஸ் இருக்கிறது. பெங்களூரில் மத்திய அமைச்சரை எம்ஜிஆர் சந்தித்ததில் மர்மம் என்ன?’ என்று கேள்வி கேட்டார் அன்றைய திமுக தலைவர் முதல்வர் கலைஞர்.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது, அவரது அரசியல் அனுபவத்துடன் சேர்ந்து கல்யாணசுந்தரம், ராமமூர்த்தி என்ற இரண்டு மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் துணையாக நின்றார்கள். இவர்கள் 1967-ல் பாராளுமன்ற உறுப்பினர்கள். அரசியல் அனுபவம் கொண்டவர்கள்.

கம்யூனிஸ்டுகளுக்கு திமுக மீது ஏற்பட்ட கோபத்தை, அதுவும் குறிப்பாக கலைஞர் மீதான கோபத்தை எம்ஜிஆர் மூலம் தீர்த்துக் கொண்டார்கள் என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. எம்ஜிஆர் உண்மையில் அதிமுகவின் வாக்கு வங்கி என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஜெயலலிதா கூட தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவார். தேர்தல் முடிந்ததும் தன்னையே முன்னிலைப்படுத்தி கொள்வார் என்பது வேறு விஷயம்.

இப்போது கூட எடப்பாடி எம்ஜிஆரை மறந்து ஜெயலலிதா துதி பாடி அரசியல் செய்வது கூட அவரது சறுக்கல்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே நடிகர்கள் எம்ஜிஆரை ஒரு அளவுகோலாக பயன்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமாக இருக்காது. அவர் ஏற்கனவே அரசியலில் இருந்து சினிமாவிலும் நடித்தவர். இவர்கள் எல்லோரும் அரசியலுக்கு புதுசு என்பதால் தான் அரசியல் களத்தில் இவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை.

இப்போது அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஒரே கூட்டணியில் வரும் என்ற பரபரப்பு எழுந்து வரும் நிலையில்… அந்தக் கூட்டணிக்கு விஜய்யின் பங்களிப்பு எந்த அளவில் இருக்கும் என்பதையும், அல்லது அவர் தனித்தே களம் கண்டால் முடிவுகள் என்ன மாதிரி இருக்கும் என்பதையும்  அவர் வெளிப்படையாக அரசியல் பேச ஆரம்பித்தால்தான் மதிப்பிட முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்!

ரவுடி சீர்காழி சத்யாவை சுட்டுப் பிடித்த போலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share