சென்னையை அடுத்துள்ள காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். Seeman meets Nirmala Sitharaman
இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசியதாக தவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையன், ஏற்கனவே டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்தநிலையில், நேற்று மீண்டும் சந்தித்து பேசியுள்ளார்.
இதேபோல, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிர்மலா சீதாராமனை சந்தித்து 2026 கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சீமான் அளித்துள்ள பேட்டியில், “நான் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசவில்லை. ஒருவேளை நான் சந்தித்திருந்தால் வெளிப்படையாக சொல்லப்போகிறேன். அதில் எனக்கு எந்த ஒரு தயக்கமோ பயமோ இல்லை.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தியை வேட்பாளராக நியமிக்கப்போவதாக ஊடகங்களில் நேற்று செய்தி வெளியீட்டீர்கள். நான் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போகிறேன் என்றால் வேட்பாளரை ஏன் அறிவிக்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 6) தமிழகம் வந்துள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் நடத்திய அடுத்தடுத்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.