‘என்ன உங்க முகம் இப்படி வெளிறி போயிருக்கு… எதுக்கும் டாக்டரைப் பாருங்க. ரத்தச் சோகையாக (அனீமியா – Anemia) இருக்கும்’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். இதைபற்றி பொது மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“வெள்ளையாக இருந்தாலே ரத்தச்சோகையா என்று கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் பதில். சரும நிறம் என்பது மெலனின் மற்றும் அவர்களது மரபணுவைப் பொறுத்தது.
அதனால் வெள்ளையாக இருப்பவர்கள் எல்லாம் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர். ‘அப்போது கறுப்பாக இருப்பவர்களுக்கு ரத்தச்சோகையே வராதா?’ என்றாலும் ‘இல்லை’ தான். அதனால் ஒருவரின் நிறத்துக்கும், ரத்தச்சோகைக்கு சம்பந்தமே கிடையாது.
நமது ரத்தம் சிவப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஹீமோகுளோபின். இது இரும்பு மற்றும் குளோபுளின் என்ற புரதச்சத்தால் உருவானது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும்போது ரத்த செல்களால் உடம்பில் இருக்கும் பிற செல்களுக்கு ஆக்ஸிஜனை தேவையான அளவுக்கு கொண்டு செல்ல முடியாது. இதனால் ரத்தச்சோகை ஏற்படுகிறது.
ரத்தச்சோகை என்பது இரும்புச்சத்து குறைபாட்டினால் மட்டுமல்லாமல், வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்களுக்கும், முடக்குவாதம், சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கும் வரலாம்.
ரத்தச்சோகை இருக்கும் அனைவருக்கும் முகம் வெளிறிப்போகாது. வெளிறிப்போய் இருப்பவர்கள் அனைவரும் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்களும் அல்லர்.
ஒருவேளை ஒருவரின் முகம் வெளிறிப்போனதோடு, அவர்களுக்கு வாய்ப்புண், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் ரத்தச்சோகையாக இருக்கலாம். தேவையான அளவுக்கு ரத்தம் தோலுக்குச் செல்லாததால் தான் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் வெளிறிப்போகிறது.
ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. நாள்கள் செல்லச் செல்ல மூச்சு வாங்குதல், உடல் சோர்வு, தூக்கம், நகத்தில் புண், கால் வலி, அடிக்கடி மயக்கம், அடிக்கடி தலைவலி, வாய்ப்புண், நெஞ்சு படபடப்பு, அறிகுறிகளை உணர்வார்கள். நிலைமை மிகவும் மோசமாகும்போது இதயப் பிரச்னைகள் கூட ஏற்படலாம்.
காய்கறிகள், கீரைகள், உலர் பழங்கள், பழங்கள், கேழ்வரகு, கம்பு, ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ரத்தச்சோகை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் ஏற்படும். அதனால் காரணத்திற்கு ஏற்றவாறு ரத்தச்சோகைக்கான சிகிச்சை மாறுபடும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தூத்துக்குடி தக்காளி ஜாம்
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி இம்சை தரும் கால் ஆணி… தீர்வு என்ன?