‘ஜென்ஸீ’ தலைமுறையினரைக் கவருமா ‘கண்ணப்பா’?

Published On:

| By uthay Padagalingam

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ வரும் 27ஆம் தேதியன்று நாடு முழுக்கப் பல மொழிகளில் வெளியாகிறது. ’பான் இந்தியா’ படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார்.

மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய்குமார், காஜல் அகர்வால் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் தோன்றுகிற இப்படத்தில் சரத்குமார், மதுபாலா, மோகன்பாபு, முகேஷ் ரிஷி, கருணாஸ், பிரம்மானந்தம், பிரம்மாஜி, ஐஸ்வர்யா, சிவபாலாஜி, சம்பத்ராம், சப்தகிரி, சுரேகா வாணி என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. does kannappa satisfy gen z kids

திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கண்ணப்பர் சிவபக்தராக அறியப்படுபவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். அந்த கதையை எடுத்தியம்புகிறது இத்திரைப்படம். நடிகரும் இயக்குனருமான தணிகல பரணியிடம் இருந்து இக்கதையை வாங்கி மனோஜ் மஞ்சு தயாரித்ததாகச் சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் ‘ஸ்கிரிப்ட்’ நிலையில் இருந்த ‘கண்ணப்பா’, 2023இல் படப்பிடிப்பு களத்தைக் கண்டது. கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் ஆண்டு கால உழைப்புக்குப் பிறகு இப்போது தியேட்டர்களில் வெளியாகிறது.

சரி, பக்தி சார்ந்த இந்த படைப்பு இன்றைய ‘ஜென்ஸீ’ தலைமுறையினரைக் கவருமா?

சமீபத்தில் இதன் இந்திப் பதிப்பு புரோமோஷன்களுக்காக மும்பை சென்ற மனோஜ் மஞ்சு, இக்கேள்விக்கு ஒரு பதிலைத் தந்திருக்கிறார்.

“ரசிகர்கள் எப்போதுமே ஸ்மார்ட் ஆனவர்கள். தங்களுக்கு நம்பிக்கை தெரிகிற படைப்பாகத் தெரிந்தால், அதனை நிச்சயம் கண்டு ரசிப்பார்கள். அதில் வயது வயது வித்தியாசமே இல்லை.

இந்தியில் வந்த ‘சாவா’ படம் இதற்கொரு சமீபத்திய உதாரணம். வீர சிவாஜியின் மகன் சம்பாஜி மஹாராஜ் கதையைச் சொன்ன அந்தப் படம் சென்னை, ஹைதராபாத், கொச்சி, பெங்களூருவிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது.

அற்புதமான கதை சொல்லல், சிறப்பான நடிப்பு, அபாரமான இயக்கமே அதற்குக் காரணம். மக்கள் வரலாறுகளை அறிய விரும்பியது அதன் வெற்றியைத் தீர்மானித்தது. சாவா போல கண்ணப்பாவும் தனக்கென்று ஒரு வரலாற்றைப் படைக்கும்” என்றிருக்கிறார் மனோஜ் மஞ்சு.

இதற்கு முன்னர் தெலுங்கில் பல திரைப்படங்கள் பக்தி இலக்கியங்களைக் காட்சி மொழிக்கு மாற்றியிருக்கின்றன. அவற்றில் சில படங்கள் தந்த அனுபவம் பக்திமான்களை ‘சிலுப்பச்’ செய்யும். அவர்கள் கேட்பதெல்லாம் ஒரே விஷயம் தான்.

‘கண்ணப்பரை கண்ணியமா காட்டியிருக்காங்களா’ன்னு யாராவது ‘கண்ணப்பா’ குழுவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்களா?  does kannappa satisfy gen z kids

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share