பிரதமர் வேட்பாளர் தேவையா? – ஜாசன்

Published On:

| By vivekanandhan

பாரதிய ஜனதா தலைவர்கள் இப்போது எதிர்க்கட்சி கூட்டணியை கேட்கும் ஒரே கேள்வி உங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதுதான்.

கிட்டத்தட்ட 23 கட்சிகள் இந்தியா கூட்டணியில் இருப்பதாக சொன்னாலும் அவர்கள் ஒற்றுமை இப்போதைக்கு கேள்விக் குறிதான்.  எதிர்க்கட்சி அணியில் மம்தா பானர்ஜி, சரத்பவார், ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் என்று எல்லோருமே பிரதமராக ஆசைப்படுகிறார்கள். ஆரம்பத்தில் கூட்டணியில் இருந்த நிதீஷ்குமார் கூட்டணி குழப்பத்தில் சந்தடி சாக்கில் தான் பிரதமர் ஆகலாம் என்று பார்த்து கூட்டணியில் தீவிரம் காட்டினார்.

ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார் என்று எல்லோரையும் பார்த்துப் பேசினார். அதன் பிறகு இது வேலைக்காகாது என்று முடிவு செய்து மீண்டும் பாஜக கூட்டணியில் ஐக்கியமானார் நிதீஷ் குமார்.

இந்தியாவின் பாராளுமன்ற நடைமுறை

இந்தியாவை பொருத்தவரை பாராளுமன்ற நடைமுறையை நாம் பயன்படுத்துகிறோம். பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அந்தக் கட்சி ஆளுங்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் அவர்தான் பிரதமர் அல்லது முதல்வர் இதுதான் நடைமுறை.

நமது வாக்காளர்கள் பெரும்பாலும் கட்சிப் பார்த்து தான் ஓட்டு போடுகிறார்களே தவிர பிரதமர் வேட்பாளர் யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை.

பிரதமர் வேட்பாளரை பெரும்பாலும் குறிப்பிடாத காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இவர் தான் பிரதமர் வேட்பாளர் என்று பெரும்பாலும் சொல்லி ஓட்டு கேட்பதில்லை. 2019-இல் கூட்டணிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்று ராகுல் காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த கூட்டம் முடிந்த சில நொடிகளிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமர் என்பதை கூட்டணி முடிவு செய்யும் என்று நிருபர்களிடம் சொன்னார். ஆனால், 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆனார்.

2004 முதல் தொடர்ந்து இரண்டு முறை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தில் அப்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி எல்லாம் ஈடுபட்டார்கள். ஆனால் மன்மோகன் சிங் தான் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பிரதமராகத் தொடர்ந்தார்.

இந்திரா காந்தி ஒரு ஆளுமை மிக்க தலைவர் என்றாலும் அவர் தன்னை பிரதமர் வேட்பாளர் என்று வெளிப்படையாக என்றும் சொல்லிக் கொண்டதில்லை. அவரை மீறி வேறு யாரும் பிரதமர் பதவிக்கு போட்டி போட போவதில்லை அது வேறு கதை. இந்திரா காந்தி ஆளுமை மிக்க தலைவராக இருந்தாலும் அவரையும் மக்கள் தோற்கடித்தார்கள். இதுதான் எதார்த்த நிலை.  இது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்.

அவசரநிலைக்குப் பிறகு பிரதமரான மொரார்ஜி தேசாய்

அவசரநிலை காரணமாக காங்கிரஸ் கட்சி மீது கடும் அதிருப்தி எதிர்க்கட்சிகளுக்கு இருந்தது ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் மிகப்பெரிய மக்கள் இயக்கம் காங்கிரஸுக்கு எதிராகவும் இந்திராகாந்திக்கு எதிராகவும்  மிகப்பெரிய இயக்கத்தை ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்தினார்.

அப்போது அவர் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் தோல்வி அடைந்து ஆட்சி வாய்ப்பை இழந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். காங்கிரசுக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்தது ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

அதே சமயம் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து வட இந்தியாவில் எதிர்க்கட்சிக் கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் தென்னிந்தியாவில் காங்கிரஸ் அப்போதும் கணிசமான இடங்களை பெற்றது. அவசரநிலையை ஆதரித்தது தென்னிந்தியா என்பது பொருள் அல்ல. காங்கிரஸ் கட்சி அப்போது தென்னிந்தியாவில் செல்வாக்கு உள்ள ஒரு கட்சியாக இருந்ததுதான் காரணம்.

ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு பிரதமரான நரசிம்மராவ்

இதேபோல் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும் போது அப்போது தேர்தல் இரண்டு, மூன்று கட்டமாக நடந்தது.  வட இந்தியாவில் அப்போது முதலில் தேர்தல் நடந்து விட்டது. தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் அனுதாப அலையில் அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்றது.

வட இந்தியாவில் காங்கிரஸ் அதிக அளவு எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறவில்லை. அப்போது திடீரென யாருமே எதிர்பார்க்காத நிலையில், தேர்தலில் போட்டி போடாத நரசிம்மராவை பிரதமராக காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது. பெரும்பான்மை இல்லாத அரசாங்கமாக இருந்த நரசிம்மராவ் ஆட்சி அதன் பிறகு பெரும்பான்மை உள்ள ஆட்சியாக மாறியது. எனவே  பிரதமர் வேட்பாளர் என்பது அவசியம் இல்லை என்பதற்கு இதெல்லாம் ஒரு உதாரணம்.

அண்ணா தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மாற்றம் சொல்லிய செய்தி

1980-ல் கருணாநிதி வற்புறுத்தலால் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 24 இடங்களில் போட்டி போட்டு இரண்டு இடங்களில் தான் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் 177  தொகுதிகளில் போட்டி போட்டு 129 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதேபோல் 1967 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிர்ப்பான மிகப்பெரிய அலை வீசியது அந்த கட்சிக்கே தெரியவில்லை. அப்போது அண்ணா ஒரு வலுவான கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இரண்டையும் சந்தித்தார். அப்போது இரண்டுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது. போட்டியிட்ட எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.  காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் தோல்வியை தழுவினார்கள். இது உலக சாதனை என்று அப்போது ராஜாஜி பாராட்டினார்.

தமிழ்நாட்டில் காங்கிரசை புறக்கணித்த அதே நேரத்தில் மற்ற இடங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இந்திரா அம்மையார் பிரதமர் ஆனார். எனவே வேட்பாளர் அளவுகோல் என்பது தேவையா என்பது இன்று வரை கேள்விக்குறிதான்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் ஆர்.எஸ்.எஸ்

முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்தபோது வாஜ்பாய் தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி அப்போது பாரதிய ஜனதா ஓட்டு கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்போது அத்வானி தான் செல்வாக்குள்ள தீவிர ஹிந்துத்துவா கொள்கை கடைப்பிடிப்பவராக இருந்தார்.   வாஜ்பாய் இந்த விஷயத்தில் மிதவாதி. ஆனால், ஆர்.எஸ்.எஸ் வாஜ்பாயை பிரதமராக பரிந்துரை செய்தது.

பாரதிய ஜனதாவில் கூட பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் அந்தக் கட்சிக்கு கிடையாது. ஆர்.எஸ்.எஸ் தான் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும். மோடியை பிரதமர் வேட்பாளர் என்று முதலில் சொன்னது ஆர்எஸ்எஸ் தான். மூன்றாவது முறையாக பிரதமர் வாய்ப்பு கிடைக்காது.  இந்த முறை பிரதமர் வேட்பாளராக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அல்லது நிதின் கட்காரி இருப்பார் என்றார்கள். ஆனால், அமித்ஷா தான் முதலில் இந்த முறையும் பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று அறிவித்தார். அதுவும் ஆர்.எஸ்.எஸ் ஒப்புதலுடன் தான் நடந்தது.

கலைஞர் கருணாநிதி முதலமைச்சரானபோது…

1989-இல் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி பெற வாய்ப்பு கிட்டியது. அப்போது ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடந்தது. கருணாநிதி தான் முதல்வர் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுக சட்டமன்ற தலைவர் பதவிக்கு கருணாநிதி பெயரை சில சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்தும்  சில சட்டமன்ற உறுப்பினர்கள் வழிமொழிந்தார்கள். இந்த சம்பிரதாய சடங்கு முடிந்ததும் ஆற்காடு வீராசாமி ஒரு மனதாக கருணாநிதி சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்க எழுந்தபோது அவரை தடுத்து நிறுத்திய பேராசிரியர் அன்பழகன். திமுக உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒரு கட்சி வேறு யாராவது சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தால் போட்டி போடலாம் என்று சொன்னார்.

அதன் பிறகு வேறு யாரும் போட்டி போட விரும்பாததால் பேராசிரியர் அன்பழகன் ஆற்காடு வீராசாமியை அழைத்து இப்போது கலைஞர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவியுங்கள் என்றார். இவை எல்லாமே நடைமுறை.

அதிபர் முறைக்குத் தான் வேட்பாளர் முக்கியம்

ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவில் அதிபர் முறை பின்பற்றப்படுகிறது.  அங்கு யார் வேட்பாளர் என்பது முக்கியம். பாராளுமன்ற நடைமுறையை பின்பற்றும் இந்தியாவிற்கு யார் பிரதமர் வேட்பாளர் என்பது தேவையில்லை. எந்த கட்சி நமக்கு நல்லது செய்யும் என்று யோசித்து வாக்காளர்கள் ஓட்டு போடுவார்கள், பணம் சலுகை இலவசங்கள் எல்லாம் கவர்ந்து விடாது அவர்கள் புத்திசாலிகள் அவர்களுக்கு எல்லாமே தெரியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா?’ : விசாரணை நடத்த எடப்பாடி வலியுறுத்தல்!

வாக்குப்பதிவு தரவுகளில் குளறுபடி : இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கார்கே கடிதம்!

தன்னை அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்ட கங்கணா… ரசிகர்கள் கேலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share