ராமதாஸை அன்புமணி சந்தித்தாரா? – தைலாபுர ரகசியங்கள்!

Published On:

| By Minnambalam Desk

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் போக்கு உச்சகட்டத்தை அடைந்த நிலையில், நேற்று (ஜூன் 5) தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார் அன்புமணி. Does Anbumani meets Ramadoss Thailapuram secrets

அப்போது ராமதாஸிடம் 45 நிமிடங்கள் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதில் இருவருக்குமிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக தைலாபுரம் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது டாக்டர் ராமதாஸ், அன்புமணியை சந்திக்கவேயில்லை என்ற லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.

தைலாபுரம் வட்டாரத்தில் நாம் பேசியபோது,

“நேற்று காலை தனது தாயார் சரஸ்வதிக்கு போன் போட்ட அன்புமணி, ‘தைலாபுரம் தோட்டத்துக்கு வருகிறேன். உங்களிடம் சில விஷயங்கள் பேசணும்’ என்று தகவல் தெரிவித்தார். அன்புமணி வரும் தகவலை, டாக்டர் ராமதாஸுடம் சொன்னார் சரஸ்வதி.

இதை கேட்டு கோபமான ராமதாஸ், ‘அன்புமணி இங்கே வந்தால் என்னை பார்க்கக்கூடாது’ என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார். மேலும், தோட்டத்தில் வேலை செய்யும் 10 பேரை அழைத்து அன்புமணி வரும்போது எதிரில் வந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் தனது மூன்றாவது மகளுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார் அன்புமணி. அங்கு தனது தாய் சரஸ்வதியிடம், ‘கோடிக்கணக்கான சொத்துக்களை கொண்ட வன்னியர் சங்க அறக்கட்டளையில் என் பெயரோ என்னுடைய மனைவி, மகள்கள் பெயரோ இல்லை. எனவே, எங்களையும் வன்னியர் சங்க அறக்கட்டளையில் சேர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அதற்கு சரஸ்வதி, ‘வன்னியர் சங்க அறக்கட்டளை நிர்வாகத்தை கவனித்து வரும் உன் அக்கா ஸ்ரீகாந்தியை இங்கு வர சொல்கிறேன். அவரிடமே பேசு’ என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு அன்புமணி சம்மதித்திருக்கிறார். பின்னர், ஸ்ரீகாந்திக்கு, போன் போட்டு அவரை தைலாபுரம் தோட்டத்திற்கு உடனே வரசொன்னார் சரஸ்வதி.

தைலாபுரம் வந்த ஸ்ரீகாந்தியிடம், ‘வன்னியர் சங்க அறக்கட்டளையில் தேவையில்லாதவர்களெல்லாம் இருக்கிறார்கள். அவர்களை நீக்கிவிட்டு என்னுடைய குடும்பத்தினர் பெயரை சேர்க்க வேண்டும்’ என்று அன்புமணி தெரிவித்தார்.

உடனடியாக எந்த முடிவையும் சொல்லாத ஸ்ரீகாந்தி, ‘இதுதொடர்பாக, ஐயாவிடம் பேசுகிறேன்’ என்றார். சரஸ்வதி அம்மா டிபன் சாப்பிட சொன்னபோதும், மறுத்துவிட்டு பாண்டிச்சேரி ஜெயராம் ஓட்டலில் டிபன் சாப்பிட்டவர் பனையூருக்கு திரும்பினார். மகன் மீது டாக்டர் ராமதாஸுக்கு உள்ள கோபம் இன்னும் குறையவில்லை” என்றே சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share